போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், சென்னையில் மட்டும் இன்று 55 சதவிகித தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை என்று அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 55 percentage workers did not went to work
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 9) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
“சென்னையில் மட்டும் இன்று ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 55 சதவிகிதம் பேர் வேலைக்கு செல்லவில்லை. இதுவே வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதற்கான அறிகுறியாகும்.
இன்று மதிய ஷிப்ட் உள்ளவர்களையும் காலையிலேயே வேலைக்கு வர சொல்லி பணியில் அமர்த்தியுள்ளார்கள். இதனால் 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் சொல்கிறார்கள்.
அவர்கள் இன்று காலை முதல் மதியம் வரை பேருந்துகளை இயக்குவார்கள். அதற்கு பிறகு பேருந்தை யார் இயக்க போகிறார்கள்?
தற்போது புதிய பேருந்து ஓட்டுநர்களை தற்காலிகமாக தேர்வு செய்து பேருந்தை இயக்க சொல்கிறார்கள். அரசு பேருந்தின் கண்டிஷன் தினமும் இயக்கும் ஓட்டுநர்களுக்கு மட்டும் தான் தெரியும். இதனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
அரசிடம் நாங்கள் 6 கோரிக்கைகளை முன்வைத்து, பின்னர் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் செயல்படுத்த கேட்டுக்கொண்டோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் மொத்தம் ரூ.70 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். ஆனால் அரசிடம் தொழிலாளர்களுக்கு தர வேண்டிய பணம் ரூ.13,000 கோடி நிலுவையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் காவலர்கள் மற்ற பணிகளை விட்டுவிட்டு போக்குவரத்து பணிமனைகளில் காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு ஈகோ பார்க்காமல் தொழிற்சங்கத்தை அழைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி காண வேண்டும். இப்படியே போனால் பொங்கலுக்கு 100 சதவிகிதம் பேருந்துகள் இயங்காத சூழல் ஏற்படும்.
இதனால் மக்களுக்கு தான் பெரிய பிரச்சனை ஏற்படும். இதனை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் உடனடியாக இன்று பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!
சென்னையில் வருமான வரித்துறை சோதனை!
55 percentage workers did not went to work
