”கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகாது” : காட்டமான நீதிபதி… கறார் காட்டும் கமல் – முழு விவரம்!

Published On:

| By christopher

kamal thug life not release in karanataka - court

மொழி சர்ச்சைக் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை கமலின் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது. kamal thug life not release in karanataka – court

‘தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்’ என நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தக் லைஃப் பட வெளியீட்டைத் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தது.

கேஎஃப்சிசி-யின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

are you linguist?- Karnataka HC slams Kamalhaasan

ADVERTISEMENT

நீங்கள் மொழியியல் அறிஞரா?

அப்போது, “எந்தவொரு குடிமகனுக்கும் மற்றவரின் உணர்வுகளை புண்படுத்த உரிமை இல்லை. மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. அதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நீங்கள் பேசிவிட்டீர்கள். எந்த அடிப்படையில் அப்படி பேசினீர்கள்? நீங்கள் என்ன வரலாற்றாசிரியரா அல்லது மொழியியல் அறிஞரா?

நீங்கள் அவ்வாறு பேசியதால் தற்போது கலவரச்சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு தானே கேட்டார்கள்? ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி கர்நாடக மக்களின் உணர்வுகளை நீங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளீர்கள்.

நீங்கள் மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும். நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் படம் ஏன் ஓட வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் மன்னிப்பு கேட்பது குறித்து கமலுக்கு ஆலோசனை வழங்குமாறு அவரது வழக்கறிஞக்கு உத்தரவிட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்து கமல்ஹாசன் கடிதம் எழுதினார்.

kamal write letter to KFCC after court condemned

தமிழைப் போலவே, கன்னடமும்…

அதில், “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் மட்டுமே எனது வார்த்தைகள் வெளிப்படுத்தின. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் பகைமைக்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பவில்லை.

எனது வார்த்தைகள் அவை நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் உண்மையிலேயே நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து கமல் நிறுவனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மதியம் 2.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை!

அப்போது, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம் திருப்தியளிக்கிறது. ஆனால் அதில் ’மன்னிப்பு’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்பதை தனி நீதிபதி எம். நாகபிரசன்னா சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து காட்டமாக பேசிய அவர், “இதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. நீங்கள் கமல்ஹாசனாகவோ அல்லது யாராகவோ இருக்கலாம். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த முடியாது.

இந்திய நாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அப்படியிருக்கும் போது, ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது” எனத் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா

எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?

அதற்கு மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, ”தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாம், தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “1987 ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது” என்று வாதிட்டு, படத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.

அதற்கு நீதிபதி, ”படத்தின் கலை முக்கியத்துவத்தை இந்த அமர்வு புரிந்து கொள்கிறது. ஆனால் ஒருவரின் பேச்சு மற்றொருவரின் உணர்வை புண்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு!

அதற்கு கமல் தரப்பில், “மனுதாரர் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் மீதான தடைக்கும் ஒப்புக்கொண்ட அவர், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, ”கமல் மற்றும் கே.எஃப்.சி.சி இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரை கமலின் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது” என நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார்.

மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share