ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‛இந்தியன் 2′. சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி, சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜூலை 12ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இதன் 2.38 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலர் நேற்று மாலை அதிகாரபூர்வமாக இந்தியன் – 2 சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளுக்கு முன்பு(1996) இந்தியன் படம் பிலிம் தொழில்நுட்பத்தில் தயாரானது. அப்போது டிரைலர் என்கிற வடிவம் இல்லாத சூழல் இந்தியன்-2 டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது டிரைலர்?
நவீன தொழில்நுட்ப வசதிகள் டீசர், டிரைலர் என மாற்றம் கண்டுள்ள சூழலில் வெளியாகியுள்ள ஷங்கரின் இந்தியன் – 2 டிரைலர் என்ன சொல்கிறது?
ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வரை வெளியான நேரடி தமிழ் படங்கள் 12 அவற்றில் ஜீன்ஸ், பாய்ஸ், ஐ, நண்பன், எந்திரன், 2.0 ஆகிய ஆறு படங்களை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் அரசியல், ஊழல், அதிகார துஷ்பிரயோகங்களை பற்றிய படங்களாகும்.
ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான முதல் படம் ஜென்டில்மேன் இட ஒதுக்கீடு, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் அத்துமீறல், ஊழலை பேசிய படம்.
1994 ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது படம் காதலன். அன்றைய தமிழ்நாட்டு அரசியலை அதிகார துஷ்பிரயோகத்தை பேசிய படம்.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான மூன்றாவது படமான இந்தியன் முழுக்க அரசு ஊழலை பற்றி மட்டும் பேசிய படம்.
1999 ல் ஷங்கர் தயாரித்து இயக்கிய படம் முதல்வன், தமிழ்நாட்டு அரசியல் ஆட்சி அதிகாரம் ஊழலை பற்றி பேசிய படம்.
2005 ஆம் ஆண்டு ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன் படத்தில் மத்திய மாநில அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களை பற்றி பேசியது.
2007 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் தமிழ்நாடு அரசில் நடைபெறும் ஊழலை பற்றிய படம்.
இந்தப் படங்கள் அனைத்தையும் பெரியதொரு திரைக்கதை மிக்சியில் அரைத்து வடிகட்டினால் என்ன திரைக்கதை, வசனம் கிடைக்குமோ அதுதான் டிஜிட்டல் வடிவில் உருவாகியுள்ள இந்தியன் – 2 டிரைலர் என்று பார்க்க தோன்றுகிறது.
படபடக்கும் அதிரடி வசனங்கள்!
’படிப்புக்கு ஏத்த வேலையில்லை வேலைக்கு ஏத்த சம்பளம் இல்ல’, ’திருட்றவன் திருடிட்டு தான் இருப்பான்’ என தொடக்கமே ஊழல் குறித்த இந்திய மாணவர்கள், இளைஞர்களின் குமுறலாக வெளிப்படுகிறது.
இடையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் காட்சிகள் வந்து செல்கின்றன. ’சிஸ்டத்த சரி செய்ய துரும்ப கூட கிள்ளி போட்றதில்ல’ என சித்தார்த் சொல்லி முடிக்க.
அடுத்து கமலஹாசனின் அதிரடியான அறிமுக காட்சி திரையில் விரிகிறது. கமலஹாசன் பல தோற்றங்களில் காட்சியளிக்கிறார். சட்டையை கழட்டி கொண்டு சண்டை போடுகிறார் இந்தியன் தாத்தா.
’காந்தி வழியில நீங்க, நேதாஜி வழியில நான்’
’ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்ற வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது.
’இந்தியன் தாத்தா திரும்பி வரணும், தப்பு செஞ்சா அதிலிருந்து தப்பிக்க முடியாதுங்குற பயம் வரணும்’ என்கிற வசனங்கள் நடுத்தர மக்களின் குமுறல்.
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திலும் இதே ஊழல்தான் பேசப்பட்டது. 28 ஆண்டுகள் கழித்தும் அதே விஷயங்கள் தான் திரைக்கதையில் இடம்பிடித்திருக்கிறது என்பதை டிரைலர் உணர்த்துகிறது.
அதே கமல் தான்… ஆனால்..
மேலும் இந்தியன் – 2 படம் அதிகாரபூர்வமாக 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது படத்தின் நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கவில்லை.
பிப்ரவரி 21, 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிறு கட்சிகளை இணைத்து கொண்டு போட்டியிட்டார்.
எந்த கட்சிகளை ஊழலுக்கு காரணமான கட்சிகள் என கூறினாரோ, அக்கட்சிகளுக்கு எதிராக அப்போது தேர்தல் பிரச்சாரங்களில் முழக்கமிட்டார் கமல்ஹாசன்.
ஆனால் நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் அக்கட்சி ஒன்றுடன் கூட்டணி வைத்து அக்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், தற்போது இந்தியன் – 2 டிரைலர் வெளியாகி உள்ளது கமலஹாசனே எதிர்பாராத ஒன்று.
ஊழலையும், அதிகார அத்துமீறலையும் தடுக்கவும், ஒழிக்கவும் ஆயுதத்தை கையில் எடுக்கும் சேனாதிபதி வழிக்கு மாற்றாக எதையும் இப்படத்தில் ஷங்கர் கூறியிருக்கிறாரா? இல்லை அரைத்த மாவை நவீன ஆட்டுக் கல்லில் அரைத்திருக்கிறாரா? என்பது ஜூலை 12 அன்று இந்தியன் – 2 திரைக்கு வந்தால் தெரியும்.
https://www.facebook.com/reel/456287023786168
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– அம்பலவாணன்
கனமழை எதிரொலி : இரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பியூட்டி டிப்ஸ்: தோல் உரியும் பிரச்சினைக்கு… தீர்வு இதோ?
டாப் 10 நியூஸ் : சபாநாயகர் தேர்தல் முதல் ஆளுநரின் டெல்லி பயணம் வரை!
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு!