மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 13) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். Kamal Haasan Udhayanidhi meeting
கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டதாக அப்போதே கமல் தெரிவித்தார். மேலும், கமல் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்தார்.

இந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-களாக உள்ள தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன், எம்.எம்.அப்துல்லா ஆகியோரின் பதவிக்காலமும், திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக எம்.பி சந்திரசேகர், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையிலேயே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கமல்ஹாசனை நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் இன்று கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என்று தெரிவித்துள்ளார். Kamal Haasan Udhayanidhi meeting