மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. kamal haasan thug life audio launch
இந்தநிலையில், மே 16-ஆம் தேதி சென்னையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில், போர்ப்பதற்றம் காரணமாக, இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நமது நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் மற்றும் தற்போதைய உச்சக்கட்ட பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
தாய்நாட்டைப் பாதுகாப்பதில் நமது வீரர்கள் தளராத துணிச்சலுடன் முன்னணியில் உறுதியாக நிற்கும்போது, இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம் என்று நான் நம்புகிறேன்.

இசை வெளியீட்டு விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில், நமது நாட்டைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கும் ஆயுதப் படைகளின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எங்கள் எண்ணங்கள் உள்ளன.
குடிமக்களாக கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமையுடன் பதிலளிப்பது நமது கடமை. கொண்டாட்டம் என்பது சிந்தனைக்கு வழிவகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.