நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று (மே 30) சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார். Kamal Haasan meets Mk Stalin
இந்த சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வர் சொல்லியிருக்கிறார். நாங்கள் அதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முன் அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை சொன்னார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சம்மேளனம் கூறியிருப்பது குறித்து பேசிய கமல்ஹாசன்,

“இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு. சட்டத்தையும், நீதியையும் நான் முழுமையாக நம்புகிறேன். அன்பு தான் வெற்றி பெறும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் மீதான என்னுடைய அன்பு உண்மை. ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவுடன் செயல்படுவர்களை தவிர, வேறு யாரும் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
நான் தவறாக பேசியிந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், நான் தவறாக பேசவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று திமுகவுக்கு எதிராக கட்சி தொடங்கிய நீங்கள் தற்போது திமுகவுடனேயே கூட்டணி வைத்திருக்கிறீர்களே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “நாட்டுக்கு தேவை அதனால் வந்திருக்கிறேன்” என்றார்.