கன்னட மொழிக் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உட்பட அம்மாநிலத்தின் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். kamal haasan kannada language issue get condemns
கமல்ஹாசன், சிம்பு நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ம் தேதி வெளியாக உள்ளது.
இதனையொட்டி கடந்த 24ஆம் தேதி சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் சிவராஜ் குமாரை பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ‘சிவண்ணாவின் தந்தை ராஜ்குமாரிடம் இருந்து தான் நான் பணிவைக் கற்றுக்கொண்டேன். இவரை எல்லோரும் சிவாண்ணா என்கிறார்கள். ஆனால் நான் அவருக்கு சித்தப்பா முறை. அவர் கன்னடத்து சூப்பர் ஸ்டார். ஆனால் உங்கள் பிரதிநிதியாக என் ரசிகனாக இங்கு வந்திருக்கிறார். இது அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் உயிரே, உறவே, தமிழே எனப் பேச்சை ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்து தான் உங்கள் பாஷையும்.. எனவே நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு தான் கர்நாடகாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கர்நாடகாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பலர் கமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்துள்ளதுடன், படத்தையும் தடை செய்ய கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்!
இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கமலுக்கு அது தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ”கமல்ஹாசன் தனது நாகரிகமற்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என பேசியுள்ளார்.
கலபுராகி பாஜக மாவட்டத் தலைவர் சந்து பாட்டீல் கூறுகையில், “நேற்று, நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி தமிழ்நாட்டிலிருந்தும் தமிழர்களிடமிருந்தும் பிறந்தது என்று கூறி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது கர்நாடகாவின் அனைத்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. எனவே, கர்நாடகாவின் 6 கோடி மக்களின் சார்பாக, கமல்ஹாசன் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்” என்று தெரிவித்தார்.
கன்னட மொழி ஆர்வலர் சிவசரணப்பா வாலி கூறுகையில், “கமல்ஹாசன் உரையில் சில தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அனைவரும் கமல்ஹாசனை மதிக்கிறார்கள், அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மரியாதைக்குரிய இலக்கியவாதி. எனினும், கன்னடம் தமிழ்நாட்டிலிருந்து தோன்றியது என்று அவர் கூறினார், அதுகுறித்த துல்லிய பதிவுகள் இல்லை, அது தவறு. கமல்ஹாசன் போன்ற ஒருவர் அப்படி பேசக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
