தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்ற கருத்து சர்ச்சையை அடுத்து, தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கோரியும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 2) மனு தாக்கல் செய்துள்ளார். kamal filed case in karnataka high court
மணிரத்னம் – கமல் கூட்டணியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவில் ‘தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்’ என கமல் பேசியது சர்ச்சையானது.
கமலுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக தக் லைஃப் பட வெளியீட்டைத் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தது.
இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படம் எந்தவித இடையூறும் இன்றி வெளியாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ’கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
