’உத்தம வில்லன்’ படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று (மே 10) வராததால் இயக்குநர் லிங்குசாமி தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.
நீண்ட ஒப்பந்த உடன்பாட்டு சர்ச்சைகளுக்கிடையே லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. வணிக ரீதியாக அப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இதனையடுத்து உத்தம வில்லன் திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு உறுதி அளித்திருந்தார்.
ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும், ஒப்புக்கொண்டபடி தங்களது தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்காமல் இழுத்தடிப்பதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்ட கடிதத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
அதனை ஏற்று, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் புகார் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தை நடத்த கமல்ஹாசனுக்கும் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் லிங்குசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட நிலையில், லிங்குசாமி தரப்பினர் வந்தனர். ஆனால் நடிகர் கமல்ஹாசன் வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த லிங்கசாமி, கமலிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்து ஏமாற்றத்துடன் சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள் : கெஜ்ரிவால் ரோடு ஷோ முதல்… சூரிய காந்த புயல் எச்சரிக்கை வரை!