பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கவுள் பாளையம் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் செல்வக்குமார். இவருடன் பங்குதாரராக இருப்பவர் முருகேசன். இவர் அரசுக்குச் சொந்தமான இடத்தைக் குத்தகைக்கு எடுத்து ஐந்து ஆண்டுகள் உரிமம் பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார்.
இங்கு பணியாளர்கள் ஹிட்டாச்சி உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மண்ணில் தளர்வு ஏற்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹிட்டாச்சி இயந்திரம் பாறை பள்ளத்தில் விழுந்தது.
இதன் காரணமாகக் கடந்த இரு நாட்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியிருக்கிறது. பொக்லைன் மூலமும், வெடிகளை வைத்தும் பாறைகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பாறை சரிந்ததில் பணியிலிருந்த சுப்ரமணியன் மற்றும் வினோத் ஆகிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா மற்றும் எஸ்.பி.மணி ஆகியோர் சம்பவ ஆய்வு செய்தனர். விபத்து குறித்து ஆட்சியர் கூறுகையில் விபத்து நடந்த கல்குவாரி மூடப்படும். கனிமவள அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
பிரியா
