மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப் புகழ்பெற்ற சித்திரை விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். Kallazhagar emerged Vaigai River
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மே 6ஆம் தேதி முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 8ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 9ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம், மே 10ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை கோலாகலமாக நடந்தன.
நேற்று முன்தினம் அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக மதுரைக்கு வந்தடைந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலா்மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று (மே 12) அதிகாலை 3 மணியளவில் தங்க குதிரையில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். Kallazhagar emerged Vaigai River
காலை 5.45 மணியில் இருந்து 6.05 மணிக்குள் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கிடையே வைகை ஆற்றுக்கு செல்லும் வரையில் பொதுமக்கள், கள்ளழகர் வேடம் அணிந்து வந்திருந்த பக்தர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.
பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தன. தொடர்ந்து 7.25 மணி வரை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கள்ளழகர்.
இந்த நிகழ்ச்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். சுமார் 10 லட்சம் பேர் மதுரையில் குவிந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அழகரை பக்தர்கள் தரிசிக்கவுள்ளனர். மே 14ஆம் தேதி மீண்டும் அழகர்மலை கிளம்புகிறார் கள்ளழகர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தால் மதுரையே விழா கோலம் பூண்டிருக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மூன்று அடுக்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன்களையும் பறக்கவிட்டு போலீசார் கண்காணித்தார்.
மொத்தம் 4000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கள்ளழகர் ஆடை நிறத்தின் ஐதீகம்…
ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் எந்த நிற ஆடையில் ஆற்றில் இறங்குகிறார் என்று முக்கியமாக பார்க்கப்படுகிறது. எந்த வண்ணத்தில் இறங்குகிறாரோ… அந்த வண்ணத்துக்கு ஏற்ப நாட்டில் நல்லது கெட்டது நடக்கும் என்பது ஐதீகம்.
கள்ளழகரின் அலங்கார பெட்டிக்குள், பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் பட்டாடைகள் வைக்கப்பட்டிருக்கும். தலைமை பட்டர் அலங்கார பெட்டிக்குள் கைவிட்டு எதேனும் ஒரு வஸ்திரத்தை கையில் எடுப்பார். அதில் எந்த நிற பட்டாடை வருகிறதோ, அதுதான் கள்ளழகருக்கு அணிவிக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு பச்சை பட்டெடுத்துள்ளார். அதனால் இந்த ஆண்டு நாடு செழிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதுவே சிவப்பு நிற பட்டு வந்திருந்தால், நாடு செழிப்பாக இருக்காது.. அமைதியாக இருக்காது என்று அர்த்தம்.
வெள்ளை வந்திருந்தால் நாடு இடைபட்ட நிலையில் இருக்கும். மஞ்சள் வந்திருந்தால் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடக்கும். இப்படி ஒவ்வொரு வண்ணத்துக்கு ஒரு ஐதீகம் உண்டு.
கடந்த ஆண்டும் கள்ளழகர் பச்சை பட்டுடுத்திதான் ஆற்றில் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. Kallazhagar emerged Vaigai River
