145 நாட்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் (டிசம்பர் 5) நேரடி வகுப்புகள் துவங்கியது.
கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஜூலை மாதம் 17-ஆம் தேதி பள்ளியில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. வகுப்பறையில் உள்ள மேசைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தநிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மாணவி உயிரிழந்த வழக்கில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி , முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஆகஸ்ட் 29-ஆம் தேதி இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை மீண்டும் திறக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, சோதனை அடிப்படையில் பள்ளியை டிசம்பர் 5-ஆம் தேதி திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று முடிந்தது.

இந்தநிலையில், இன்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை இலை தோரணங்கள் மற்றும் மாலைகள் கட்டப்பட்டிருந்தன.
மாணவர்கள் காலை முதல் உற்சாகமாக பேருந்து மற்றும் பெற்றோர்களின் வாகனங்களில் பள்ளிக்கு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி சுப்பிரமணி தலைமையில் போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
