கள்ளக்குறிச்சி மாணவி செல்போன்: காவல்துறையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Prakash

”கள்ளக்குறிச்சி மாணவி பேசிய செல்போனை, காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டறிய வேண்டும் என்றும் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.

ADVERTISEMENT

இதனால் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர். இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தனது மகள் மரண வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அந்த மனு கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை, சீலிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, ”தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால்தான் விசாரணை நடத்த முடியும் என்கிற சூழல் இல்லை. அதை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் தரப்பு விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ‘நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர், ”பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் (இந்த வழக்கில் தமிழக காவல் துறை பதிலளிக்க நேற்று (டிசம்பர் 14) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா, இல்லையா” எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து, இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம்.

அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும். செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

ஜெ.பிரகாஷ்

தீபிகா காவி உடை: படத்துக்குத் தடை?

ஐஸ்வர்யா ராயுடன் காதல்: விவேக் ஓபராயின் விநோத பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share