கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜூலை 17 ஆம் தேதி பள்ளியில் வன்முறை வெறியாட்டம் நடந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்தபடி அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், அன்பில் மகேஷ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தனியார் பள்ளியில் வன்முறை நடைபெற்றதற்கான காரணம் என்ன, பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்குக் குழு அமைத்தல், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனை முடிவடைந்த நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாக இன்று (ஜூலை 19) டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “வன்முறைக்கு காரணமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியவர்கள், பொய்யான செய்திகளைப் பரப்பியவர்கள், வன்முறை நிகழ்த்தியவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில், 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்