கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் கட்சியினரை ஊக்குவிக்கும் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளரான உதயசூரியன் எம்.எல்.ஏ தனது மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பணிகளை பாராட்டு வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு சிறப்பான ஏற்பாடு செய்தார்.
அதன்படி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தின் இளைஞரணியைச் சேர்ந்த ஒன்றிய-நகர-பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களான 105 பேருக்கு இருச்சக்கர மோட்டார் சைக்கிள்களை வாங்கினார்.

அதனை திமுக இளைஞரணிச் செயலாளரும், துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவும் பங்கேற்றார்.
ஏற்கெனவே கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரான வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, தனது மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு இரு சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சியைத் தொடர்ந்து தனது மற்றொரு பொறுப்பு மாவட்டமான திருப்பத்தூரிலும் இதே போன்று கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் வழங்க அமைச்சர் எ.வ. வேலு முடிவு செய்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து திமுக மாவட்டங்களில் உள்ள இளைஞரணி நிர்வாகிகளுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் திமுக இளைஞரணியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய-நகர-பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் குஷியாக உள்ளனர்.
