கள்ளச்சாராய விற்பனை… அண்ணாமலை புகார்… கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மறுப்பு!

Published On:

| By Selvam

கள்ளச்சாராய விற்பனைக்கு பயந்து கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மோகன் ராஜ் விருப்ப ஓய்வு பெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை மோகன்ராஜ் மறுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகன் ராஜ், கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். இதனால் அவரை திமுக முக்கிய புள்ளிகள் மிரட்டியதால் ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே முன்னதாக விருப்ப ஓய்வில் சென்றார்” என இன்றைய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகிருந்தது.

இந்த செய்தியை குறிப்பிட்டு, “எஸ்.பி மோகன் ராஜை மிரட்டிய திமுக முக்கிய புள்ளிகள் யார் என்பதை கண்டறிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள தனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்துக் கொள்வதற்காகவே தாம் விருப்ப ஓய்வில் சென்றதாக எஸ்.பி மோகன் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருக்கும் முன்பு அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில் நானும் எனது மனைவியும் அமெரிக்கா சென்றோம். அதற்காக நான் விருப்ப ஓய்வு பெற்றேன்.

ஆனால், கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி கள்ளச்சாராயத்திற்கு பயந்து நான் பணி ஓய்வு பெற்றதாக விரும்பத்தகாத, உண்மைக்கு புறம்பான பொய்ச்செய்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள்.

அதில் எந்த உண்மையும் இல்லை. பொய்ச்செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

சமூகப் போர்வாள் S.M. பாக்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share