கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு… சிபிஐக்கு மாற்றம்! 

Published On:

| By Kavi

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 68 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த சின்னதுரை, ஜோசப் ராஜா, மதன்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, பாமகவைச் சேர்ந்த கே.பாலு, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன், பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

“கள்ளச்சாராய மரண வழக்கை உள்ளூர் போலீஸ் விசாரித்தால்  நியாயமாக இருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று அந்த மனுக்களில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள், டி.கிருஷ்ணகுமார் மற்றும் பிபி பாலாஜி அமர்வு விசாரித்து வந்தது.

அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர்  இன்பதுரை தரப்பில், “2023ம் ஆண்டில் மரக்காணத்தில் விஷச் சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்களும் போலீசாரிடம் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது.

கருணாபுரம் பகுதியில் 300 பேர் வரை விஷச்சாராயத்தைக் அருந்தியுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என வாதிடப்பட்டது.

வழக்கறிஞர் கே.பாலு தரப்பில்,  “ஆண்டுதோறும் இதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் காவல்துறையினர்- கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்பது தெரியவருகிறது. அதனால் சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்” என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. .

பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ், வால்பாறை  முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் ஆகியோர் தரப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து, கொண்டு வந்து விற்க முடியாது. ஆனால், போலீஸ் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என அரசு கூறுகிறது. கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வாதங்களுக்கு தமிழக அரசு தரப்பில், “எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை இடம்மாற்றம் செய்தும்,  காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. உள்ளூர் அரசியல்வாதி, போலீசார் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை நிலையில் இன்று (நவம்பர் 20) நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

“காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. மாநில போலீசார் கண்டும் காணாமலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என குறிப்பிட்ட நீதிபதிகள், “சிபிசிஐடி கள்ளச்சாராய மரண வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என்பது மதுவினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

மகாராஷ்டிரா தேர்தல் : 11 மணி நிலவரம்!

ஷாருக்கான் மகன் இயக்கும் நெட்ஃப்லிக்ஸ் வெப் சீரிஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share