’டாக்டர் கலாம் ஒரு முன்மாதிரி. சிறு வயதில் அவர் எனக்கு ஊக்கமளிக்கிற தலைவராகத் திகழ்ந்தார். அவரது புத்தகங்கள் எனது வாழ்வை மாற்றின”. எண்பதுகளில், தொண்ணூறுகளில் பிறந்து ஏதேனும் ஒரு துறையில் சாதித்த ஒரு இந்தியரிடம் இது போன்ற வார்த்தைகளைக் கேட்பது புதிய விஷயமில்லை.
அதேநேரத்தில், ‘அப்படியொரு ஊக்கத்தைத் தருகிற படைப்பாக, கலாம் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தை இளைய தலைமுறையினருக்குத் தரப்போகிறேன்’ என்று சொல்வது நிச்சயம் புதிதுதான். இவ்வார்த்தைகளை உதிர்த்திருப்பவர் இந்தி இயக்குனர் ஓம் ரவுத்.
’லோக்மான்ய: ஏக் யுக்புருஷ்’ எனும் மராத்திப் படத்தையும் ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ எனும் இந்திப் படத்தையும் ஏற்கனவே இவர் தந்திருக்கிறார். இரண்டுமே ‘பயோபிக்’ வகையறா தான். இது போக ‘ஆதி புருஷ்’ஷையும் இவர் இயக்கியிருக்கிறார்.
“எந்தவொரு பிரபலம் அல்லது தலைவர்களைப் பற்றிப் படமெடுப்பது சாதாரணமல்ல. அவர்களது வாழ்க்கையில் எதையெல்லாம் சொல்கிறோம் என்பதைக் காட்டிலும், எதையெல்லாம் சொல்லாமல் தவிர்க்கிறோம் என்பதும் மிக முக்கியம். அந்த வகையில், ரசிகர்கள் ஊக்கம் பெறுகிற வகையில் கதை சொல்வதே பிரதானம் என நினைக்கிறேன்” என்றிருக்கிறார் ஓம் ரவுத்.

மேற்சொன்னதில் இருந்தே, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ’பயோபிக்’கின் இயக்குனர் இவர் தான் என்பது பிடிபட்டிருக்கும். இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
“அவரை விடச் சிறப்பாக யாரும் இந்த பயோபிக்கில் நடிக்க முடியாது. அவரோடு சேர்ந்து பணியாற்றுவதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்” என்றிருக்கிறார் ஓம் ரவுத்.
கடந்த மே மாதமே கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை ஓம் ரவுத் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
