தலைமறைவான கலாஷேத்ரா பேராசிரியர் கைது!

Published On:

| By Monisha

kalakshetra professor hari padman

தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 3) கைது செய்தனர்.

சென்னையில் கலாச்சார அடையாளமாக இருந்த கலாஷேத்ராவில் கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு பேராசிரியர்கள் மற்றும் நடன பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது என்று புகார்கள் எழுந்தன.

ADVERTISEMENT

கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநரும் மூத்த நடிகையுமான லீலா சாம்சனின் ட்விட்டர் பதிவை அடிப்படையாக வைத்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஆனால் பாலியல் புகார்கள் உறுதி செய்யப்படாததால் தேசிய மகளிர் ஆணையம் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால் பாலியல் புகார் குறித்து நேரடியான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின்னஞ்சல் வாயிலாக கலாஷேத்ரா மாணவ, மாணவிகள் கடிதம் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கலாஷேத்ராவிற்கு நேரில் சென்று மாணவிகளிடம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் பேராசிரியர்கள், ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது மாணவிகள் புகார்களைத் தெரிவித்ததாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையிலும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இன்று (ஏப்ரல் 3) மதியம் 12 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் மாநில மகளிர் ஆணையம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது. பேராசிரியர் ஹரிபத்மனும், தான் கலாச்சார நிகழ்ச்சிக்காக ஐதராபாத் வந்துள்ளதாகவும் சென்னை திரும்பியதும் விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கலாச்சார நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றிருந்த மாணவர்கள் குழு நேற்று (ஏப்ரல் 2) சென்னை திரும்பினர். ஆனால் அவர்களுடன் ஹரிபத்மன் வரவில்லை என முதலில் போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் விரைவில் தலைமறைவாகியுள்ள அவர் பிடிபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாகியிருந்த ஹரிபத்மனை இன்று காலை தனிப்படை போலீசார் சென்னை அருகே கைது செய்தனர். மேலும் அவரிடம் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே இன்று கலாஷேத்ராவின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இருவரும் மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகின்றனர்.

மோனிஷா

ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி தேசிய மாநாடு!

ஃபார்முக்கு திரும்பிய விராட்… திணறிய மும்பை இந்தியன்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share