மீனவர்கள் கடத்தல்காரர்களா? – அண்ணாமலை பேச்சுக்கு காளியம்மாள் கண்டனம்!

Published On:

| By christopher

kalaiyammal condemns annamalai

மீனவர்கள் கடத்தல் செய்யப் போனால் இலங்கை கடற்படையினர் கைது செய்வார்கள் என பேசிய அண்ணாமலைக்கு காளியம்மாள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். kalaiyammal condemns annamalai

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக நடந்து வரும் காலவரையற்ற போராட்டத்தில் நேற்று (மார்ச் 2) கலந்துகொண்டார்.

மீனவர்களை அவமானப்படுத்தும் அண்ணாமலை

தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக மீனவர்கள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் தொடர்ந்து போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். எங்கள் போராட்டத்திற்கு அரசு செவிமடுக்காததற்கான காரணம் தெரியவில்லை.

மீனவர்கள் கடத்தல் செய்யப் போனால் இலங்கை கடற்படையினர் கைது செய்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது.

இலங்கையின் பொருளாதார சூழலும் இந்தியாவை சார்ந்திருக்கிறது. மீன்பிடித்தல் தொடர்பாக பிரத்தியேக சட்டம் இயற்ற இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. தற்போதும் எங்கள் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளோம்.

யாரைக் கேட்டு சட்டம் திருத்துறீங்க?

எங்களுக்கான அரசியல் பங்கேற்பு எதுவும் இல்லை. மக்களவையில் எங்களுடைய பிரச்சனையை பேசுவதற்கு ஆள் இல்லை.

கடலோர மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்டவைகளை யாரை கேட்டு உருவாக்குறீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அங்கே யாருடன் விவாதிக்கப்பட்டது? எந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது? இந்த தேசிய மீன்வளக் கொள்கை என்பது யாருக்காக உருவாக்கப்பட்டுள்ளது?

இன்னொரு பக்கம், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தைத் திருத்தம் செய்கின்றனர். மீன் பிடிக்கப் போவது நாங்கள். ஆனால் அதை யாரைக் கேட்டு திருத்தினீங்க? யார்கிட்ட கேட்டீங்க?

கடலோடியாக பிறந்ததே ஒரு குற்றமா?

கேரளாவில் இருக்கிற மீனவர்கள் கடலுக்கே பட்டா கேட்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களாகிய நாங்கள் வாழும் நிலத்துக்கே பட்டா இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிடுவர். தமிழர்களைப் பொறுத்தவரை கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பர்.

நாங்கள் என்னதான் பாவம் செய்தோம். கடலோடியாக பிறந்ததே ஒரு குற்றமா? கடல் சமூகத்தில் தொல்குடி மக்களாக பிறந்தது ஒரு குற்றமா?

எங்களுக்கு எந்த உரிமையும் சலுகையும் இல்லை. குறைந்தபட்சம் மீன்வளத்துறை அமைச்சர் என்பது கூட எங்கள் சமூகத்திற்கு இல்லை. உரிமையை பெற முடியவில்லை எங்கள் மீனவர்கள் பிரச்சனையை யார் பேசுவது? யார் சரி செய்வது? உங்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்துவிட்டு எங்களுக்கான உரிமையைக் கூட பெற முடியாத நிலைமையில் இருக்கிறோம்.

அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளாமல், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுகளுடன் சேர்த்து விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என காளியம்மாள் தெரிவித்தார்.

எந்த கட்சியில் இணைவீர்கள்? kalaiyammal condemns annamalai

தொடர்ந்து அவரிடம் நீங்கள் அடுத்து எந்த கட்சியில் இணைவீர்கள் என செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “இதுவரை அப்படி எந்த திட்டமும் இல்லை. அந்த முடிவு என்னை மட்டும் சார்ந்ததாக இல்லாமல், மக்களை சார்ந்ததாக இருக்கும். அவர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்” என அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share