மறைந்த முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்தநாளான இன்று காலை 9 மணியளவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, அதன் முதல் பிரதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
பின்னர் கலைஞர் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் குறும்படத்தையும் அங்குள்ள காட்சி அரங்கில் கண்டு களித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பிக்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து மழைத்தூறலுக்கு நடுவே சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கும், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கும் ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
பள்ளியிலேயே வங்கிக் கணக்கு: வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட கல்வித்துறை!
Comments are closed.