கலைஞர் 100: ரஜினி சொன்ன சுவாரசிய சம்பவம்… ரசித்து கேட்ட ஸ்டாலின்

Published On:

| By christopher

kalaingar 100: Interesting incident told by Rajini

கலைஞர் நூற்றாண்டு விழாவில்  நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த சுவாரசிய சம்பவம் அங்கிருந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா ’கலைஞர் 100’ என்ற பெயரில் இன்று (ஜனவரி 6) நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் குறித்து பேசுகையில், “கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியாது.

சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை தொடர் வெற்றி படங்கள் கொடுத்து பெரிய வெற்றிபெற செய்தார்.

ADVERTISEMENT

மந்திரிகுமாரி படத்தில் கிடைத்த சம்பளத்தில் 1955ஆம் ஆண்டு வாங்கப்பட்டது தான் கோபாலபுரம் வீடு. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவச் செலவை ஏற்றவர் கலைஞர்.

கலைஞரின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விஷயம். கலைஞர் அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி, எம்.ஜி.ஆர்களை உருவாக்கியிருப்பார்.

ADVERTISEMENT

இந்த நேரத்தில் நான் உங்களுடன் முக்கியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞருக்கு நெருக்கமான நடிகர் ஒருவர் அவருடைய படத்தை கலைஞருக்கு போட்டுக் காட்ட ப்ரிவியூ ஷோ ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சமயத்தில் தான் வாக்குப்பதிவும் நடந்தது. ஓட்டு போட்டு வந்த அந்த நடிகரிடம் ’யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர், ‘இரட்டை இலை’ என பதிலளித்துவிட்டார். பத்திரிகைகளில் அது பெரிய செய்தியாகிவிட்டது.

அதனால் அன்று மாலை கலைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ப்ரிவியூ ஷோவுக்கு செல்வதில் அந்த நடிகருக்கு சங்கடம். அதனால் குளிர் காய்ச்சல் எனக் கூறி பிரிவியூவுக்கு செல்லாமல் தவிர்க்க நினைத்தார்.

ஆனால், கலைஞர் தியேட்டரிலேயே அந்த நடிகருக்காக காத்திருந்தார். அவர் வர வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

வேறு வழியில்லாமல் அந்த நடிகர் தியேட்டருக்கு வந்தார். ’என்னங்க… குளிர் காய்ச்சல்னு சொன்னீங்களாமே… சூரியன் பக்கத்துல உட்காருங்க சரியாகிடும்’னு சொல்லி கலைஞர் அந்த நடிகரை தனது பக்கத்தில் உட்கார வைத்தார்.

அந்த நடிகர் வேற யாரும் இல்ல. இந்த ரஜினிகாந்த்தான்.” என்று தெரிவிக்க, அதனை முதல்வர் ஸ்டாலின் உட்பட அங்கிருந்த பலரும் ரசித்து கேட்டனர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கலைஞரின் எழுத்தில் உருவாகும் தொண்டர்களுக்கான கடிதத்தை படித்தால் சில கண்ணீர் வரவைக்கும். சில நெருப்பை வரவைக்கும்.

கலைஞரின் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவையும் இருக்கும். சாணக்கியனின் தந்திரமும் இருக்கும். பாரதியாரின் கோபமும் இருக்கும்.

சாய்பாபாவே கலைஞரின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தார்.  ‘உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும்’ என்று கலைஞரிம் கூறியிருக்கிறேன். எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனா கலைஞருக்கு இது இரண்டுமே இருந்தது. வாழ்க கலைஞர்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலினுக்கு கலைஞர் கற்றுக்கொடுத்த ’அந்த’ அரசியல் பண்பு: கமல் பாராட்டு!

Kalaingar100: செல்ல பெயர் சொல்லி அழைத்த கலைஞர்… நினைவுகூர்ந்த தனுஷ்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share