தமிழ்நாடு வளர்ந்துவருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளர்.
இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் இறுதிநாளான இன்று (ஜனவரி 11)ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.
அப்போது அவர் “கலைஞர் பராசக்தி படத்தில் ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை பார்த்திருக்கிறது’ என்று ஒரு வசனம் எழுதியிருப்பார்.
அதேபோல் ஆளுநரை பொறுத்தவரை தமிழக சட்டமன்றமும் சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளை தான் காண்கிறது.
ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருகிறார். ஆனால் உரையாற்றமாலே போகிறார். அதனால் தான் ஆளுநரின் செயல்பாட்டை சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ள அடிப்படையில், ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் அரசு தயாரித்து வழங்கும் உரையை அப்படியே வாசிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை மரபு. ஆனால் திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் ஆளுநர் ரவி குறியாக உள்ளார்.
2021ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், 2022-ல் தனது ஆளுநர் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை.
ஆனால் இந்த 3 ஆண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களை கூறி உரை படிப்பதை தவிர்த்தார் என அவையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
அவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும்போது நாட்டுப்பண் பாடுவதும் தான் காலங்காலமாக பின்பற்றக்கூடிய மரபு.
இந்த விளக்கத்தை சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுக்கிறார். தமிழ்நாடு வளர்ந்துவருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என நினைக்கிறேன்.
நான் சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் இந்த சட்டமன்றம் நூற்றாண்டு வரலாறு கொண்டது.
அவர் அரசியல் ரீதியாக எங்களை புறக்கணிப்பதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் திராவிட இயக்கங்களே புறக்கணிப்பு, அவமானங்கள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராக உருவானது தான்.
ஆனால் இந்த சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததின் மூலமாக அவர் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செய்துவருவது, இந்த பேரவை இதுவரை காணாத ஒன்று.. இனியும் காணக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் டூ திமுக வேட்பாளர் : யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
வார இறுதியிலும் ஏற்றத்தில் தங்கம் விலை!
அயலகத் தமிழர் தினம்… வேர்களைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்கள்! இந்த வருட கான்செப்ட் என்ன தெரியுமா!