கலைஞர் பல்கலை மசோதா தொடர்பாக குடியாசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று அதிமுக பாஜக தவிர மற்ற அரசியல் கட்சி சட்டப்பேரவை தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகம் உருவாக்க சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், மாணவர்களின் நலன் கருதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
