டிலிமிட்டேஷன் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த மார்ச் 22 ஆம் தேதி, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இந்தியா முழுதும் விவாதம் ஆகியிருக்கிறது. kalaignar sowed the seeds
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடாது என்றும், அடுத்த 25 வருடங்களுக்கு டிலிமிட்டேஷனை முடக்கி வைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இப்போது நடக்கும் இந்த போராட்டத்துக்கான முன்னெடுப்பை, திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டுவிட்டார்.
1999-2004 தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக பிரதமர் வாஜ்பாய் ஆட்சி நடத்தினார். அப்போது திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது.
1976 இல் இந்திரா காந்தி டிலிமிட்டேஷனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்த நிலையில், 2001 ஆம் ஆண்டு அடுத்த டிலிமிட்டேஷன் நடவடிக்கைகள் தொடங்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதுபற்றி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் பேசிய கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன், டிலிமிட்டேஷன் மீண்டும் வர இருக்கிறது. இது குறித்து முன்கூட்டியே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
இதன் அடிப்படையில், 2000 பிப்ரவரியிலேயே இந்தியாவிலேயே முதல் அரசியல் தலைவராக இதுகுறித்து குரல் எழுப்பினார் கலைஞர்,

அப்போது அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் தேசிய சராசரியை விடக் குறைவாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், 2001 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால், மக்களவை இடங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 39 இலிருந்து 33 ஆகக் குறையும் அபாயம் இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு முன்னணியில் சிறப்பாகச் செயல்பட்ட பிற தென் மாநிலங்களும் பாதிக்கப்படும். ஆனால், அதிக பிறப்பு விகிதத்தைக் கொண்ட வட இந்திய மாநிலங்கள் மக்களவையில் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறும்.
நாடாளுமன்ற பலம் ஏற்கனவே தெற்கிற்கு குறைவாகவும், வடக்குக்கு அதிகமாகவும் உள்ளது. மேலும், உள்ளமைக்கப்பட்ட திருத்த பொறிமுறையை வழங்காமல் எந்தவொரு எல்லை மறுவரையறை நடவடிக்கையும் வடக்கு-தெற்கு இடைவெளியை அதிகரிக்கும்” என்று பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார் கலைஞர்.
இதுகுறித்து அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிரதமர் வாஜ்பாயிடம் விளக்கினார்.

இந்த சூழலில்தான் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் டிலிமிட்டேஷன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் திமுக சார்பில் அப்போதைய கடலூர் எம்.பி.யான ஆதி சங்கர் பேசினார்.
அப்போது அவர், “டிலிமிட்டேஷன் பில் 2002, ஒரு எளிய சட்டமாகத் தெரிகிறது. ஆனால், இது அவ்வளவு எளிதானது அல்ல. இதன் பரந்த விளைவுகள் மற்றும் தொலைநோக்கு விளைவுகள் காரணமாக, இது மிகவும் சிக்கலானது.
இந்த மசோதாவை நிறைவேற்ற இப்போது ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த மாநிலமும் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றங்களிலோ இடங்களை இழக்கக்கூடாது என்று நாம் அனைவரும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளோம்.
கல்வியறிவு விகிதத்தை அதிகரித்து, இறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை திறம்படக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா மற்றும் இன்னும் சில மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. மக்கள்தொகை அடிப்படையில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழ்நாடும் சில இடங்களை இழக்கும். இது ஏற்க முடியாது.

எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இது குறித்து தனது கருத்துக்களை தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பாராட்டத்தக்க பணியைச் செய்த நமது மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இழப்பதால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து குரல் எழுப்பிய முதல் தலைவர் கலைஞர்தான்.
1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்,
எனவே மக்களவைத் தொகுதி டிலிமிட்டேஷன் ஆணையத்தை அமைப்பதற்கு தேசிய அளவில் மாநிலங்களோடு விவாதித்து, பிறகு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். கூட்டாட்சி அரசியலில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மாநிலங்களுடனும் முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகே, இந்த தேவையான நல்ல நடவடிக்கையை முன்னெடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்று 2002 இல் நாடாளுமன்றத்தில் பேசினார் ஆதி சங்கர்.
25 வருடங்கள் கழித்து இதே கோரிக்கையைதான் மார்ச் 22 ஆம் தேதி நடந்த கூட்டமும் வலியுறுத்துகிறது.
இப்போது நடைபெறும் அரசியலை 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டார் கலைஞர். kalaignar sowed the seeds