ADVERTISEMENT

கலைஞர் மகளிர் உரிமை தொகை: மேல்முறையீடு செய்வது எப்படி?

Published On:

| By Selvam

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்படாத பயனாளிகள் இ சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த திட்டத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில் பயனாளிகளின் வங்கி கணக்கு எண்களுக்கு சோதனை முறையாக அரசு தரப்பில் ஒரு ரூபாய் அல்லது 10 பைசா அனுப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை விண்ணப்ப திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்திற்காக அயராது உழைத்துக்‌ கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும்‌ என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 உரிமைத்‌ தொகையாக வழங்கிட தமிழக அரசால்‌ ‘கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

இந்தத்‌ திட்டத்தில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ விண்ணப்பங்கள்‌ பெற 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை முதல்‌ கட்டமாகவும்‌, 05.08.2023 முதல்‌ 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும்‌, மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும்‌, விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல்‌ 20.08.2023 வரை சிறப்பு முகாம்‌ வழியாகவும்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்திட்டத்தின்‌ கீழ்‌ பெறப்பட்ட விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ அரசிடம்‌ உள்ள பல்வேறு தகவல்‌ தரவு தளங்களில்‌ உள்ள தகவல்களுடன்‌ ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும்‌ மற்றும்‌ அரசு அலுவலர்களால்‌ நேரடி கள ஆய்வுகளின்‌ மூலம்‌ சரிபார்க்கப்பட்டும்‌, திட்ட விதிமுறைகளைப்‌ பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர்‌ பயனாளிகளாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்‌.

மேல்முறையீடு

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின்‌ தகுதிகள்‌ சரிபார்க்கப்பட்டு, அரசாணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப்‌ பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும்‌, தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள்‌ ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின்‌ பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல்‌ அனுப்பி வைக்கப்படும்‌. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள்‌ மேல்முறையீடு செய்ய விரும்பினால்‌, குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்‌ இ-சேவை மையம்‌ வழியாக வருவாய்‌ கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்‌. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள்‌ 30 நாட்களுக்குள்‌ தீர்வு செய்யப்படும்‌.

வருவாய்‌ கோட்டாட்‌சியர்‌ மேல்முறையீட்டு அலுவலராகச்‌ செயல்படுவார்‌. இணையதளம்‌ மூலம்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடுகள்‌, அரசு தகவல்‌ தரவு தளங்களில்‌ உள்ள தகவல்களுடன்‌ ஒப்பிட்டுச்‌ சரிபார்க்கப்பட்டு, வருவாய்‌ கோட்டாட்‌சியருக்கு அனுப்பி வைக்கப்படும்‌. வருவாய்‌ கோட்டாட்சியர்‌ மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத்‌ தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும்‌ நேர்வுகளில்‌, சம்பந்தப்பட்ட சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்ட வட்டாட்சியர்கள்‌ வழி கள ஆய்வு அறிக்கையினைப்‌ பெற்று விசாரணை செய்வார்‌. இந்த மேல்முறையீடு நடைமுறைகள்‌ அனைத்தும்‌ இணையதளம்‌ வழியாக மட்டுமே செய்யப்படும்‌.

புகார்கள்‌

வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பயனாளிகளின்‌ தகுதி மற்றும்‌ தகுதியின்மைகள்‌ தொடர்பாக தனி நபர்களின்‌ மூலம்‌ வரப்பெறும்‌ புகார்கள்‌ குறித்த விசாரணை அலுவலராகச்‌ செயல்படுவார்‌. இணையதளம்‌ வழியாகப்‌ பெறப்படும்‌ புகார்கள்‌ மேல்‌ முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றி விசாரிக்கப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share