ஏ.எஸ். பன்னீர்செல்வன்
கடந்த 10 ஆண்டுகளில், கலைஞர் வாழ்க்கை சம்மந்தப்பட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட படைப்புகளுடன் நான் பயணித்துள்ளேன். பென்குயின் நிறுவனத்திற்காக நான் எழுதிய கலைஞரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு திட்டக்குழு தயாரித்த ஆவணப்படம், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்கங்கள், கலைஞர் நூற்றாண்டு விழாவின் பகுதியாக உருவாக்கப்பட்ட ‘கலைஞர் – எழுத்தாளர்’ குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டது வரை, எனக்கு கிடைத்த ஒரே ஒரு பாடம், கலைஞரைப் பற்றி எவ்வளவு தான் தெரிந்திருந்தாலும் மீள் வாசிப்பில் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டடைவோம் என்பதாகும்.
பென்குயின் நிறுவனத்திற்காக நான் ஆங்கிலத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது, அதன் முன்வரைவைப் படித்த பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், ‘கலைஞர் வாழ்க்கைப் பற்றி கூறவேண்டும் என்றால் பார்வையற்ற நான்கு பேர் யானையைத் தடவி அதன் ஒவ்வொரு பாகத்தையும் யானையாக உருவாக்கிக் கொண்டதைப் போல், நம் எல்லோரது புரிதலும் கலைஞர் என்ற பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி புரிதலாகத்தான் இருக்கிறது.
உன்னுடைய இந்தப் பன்முக வாசிப்பு ஒரு விதத்தில் ஆறுபேர்களின் பார்வையும் ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சியாக இருக்கிறது. ஆனால், கலைஞர் என்ற யானையை ஆறுபேர் மட்டும் தடவி பார்க்க முடியாது. ஆயிரம் பேர் தடவி பார்க்க வேண்டிய யானை அது’ என்றார்.
இந்தக் கூற்றை ஜெயரஞ்சன், 2020ஆம் ஆண்டு கூறியபோது அதன் முழு தன்மையையும் நான் உணரவில்லை. எ.வ.வேலு உடைய “கலைஞர் எனும் தாய்” புத்தகத்தைப் படிக்கும்போது கலைஞரைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவும். அந்த ஆளுமையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளவும் இடமிருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஜெயரஞ்சன் கூறியதுபோல் கலைஞர் என்ற யானையை இரு ஆயிரம் கைகள் கொண்டு தடவிப் பார்த்து, அந்த மாபெரும் ஆளுமையின் ஆகிருதியை எடுத்துக் காட்டும் நூல்தான் வேலு எழுதிய இந்தப் புத்தகம்.
கலைஞரே தன்னுடைய வாழ்க்கை வரலாறை “நெஞ்சுக்கு நீதி”யாக வெளியிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய “உங்களில் ஒருவன்” நூலிலும் ஆழமாகப் பதிவு செய்து இருக்கிறார். கலைஞரின் சாயல் படாமல் வெளிவந்த திராவிட இயக்கப் பதிவுகள் எதுவுமே இல்லை. இந்தச் சூழலில் கலைஞரைப் பற்றி இன்னொரு நூல் எழுதி, அந்த நூலிலும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வல்லமையுடன் எழுதியுள்ளார் வேலு.
இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சமாக இருப்பது, அவை சொல்லும் தகவல்கள் அல்ல, காரணம் இந்தத் தகவல் ஏதோ ஒரு விதத்தில் தமிழ்ப் பொதுவெளியில் கலந்துவிட்ட தகவல்கள்தான். ஆனால் அந்தத் தகவல்களை அவர் வகைமைப் படுத்தியிருக்கும் முறையில் – நீண்ட தமிழ் மரபின் ஒரு நீட்சியாக வடிவமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு குறளும் அந்தக் குறளுக்கு கலைஞர் எழுதிய உரையும் அணிகலனாக அமைந்துள்ளது. குறளில் இருந்து தொடங்கும்போதே உலகப் பொதுமறையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மரபில் மதவாத, சாதியவாத மோதல்களுக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது. கலைஞரின் சுயமரியாதை மற்றும் சமதர்மம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாய் செம்மையான தமிழ் இலக்கியம் இருக்கிறது என்பதை ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறார் வேலு.
இந்தப் புத்தகம் காலவரிசை அடிப்படையில் எழுதப்படவில்லை, மாறாக கலைஞர் என்ற ஆளுமையின் வெவ்வேறு பரிமாணங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் மொழியில் இலக்கியத் தரத்துடன் பதிவு செய்கிறது.
உதாரணமாக கலைஞரின் மொழி ஆற்றலைப் பற்றி விவரிக்கும்போது, ‘கலைஞர் ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்று வேலு விவரிக்கிறார். மூன்று தமிழ்ச் சங்கங்களைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்கு தெரியும். நான்காம் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட ஒன்று.
அதில் பாஸ்கர சேதுபதி, உ.வே.சா., ரா. இராகவையங்கார், பரிதிமாற் கலைஞர் போன்றோர் கலந்து கொண்டனர் என்பதும் நமக்குத் தெரியும். இந்தத் தமிழ்ச் சங்கம் முப்பது ஆண்டுகள் செயல்பட்ட வரலாறும் நாமறிவோம். இந்த நான்காம் தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சியாய் கலைஞரை ஐந்தாம் தமிழ்ச் சங்கமாய் வேலு பார்க்கிறார். இந்தக் கூற்றைப் புரிந்து கொள்ள வேலு முன்வைக்கும் உதாரணத்தை நாம் ஆழமாகப் படிக்க வேண்டியது அவசியமாகிறது.
“பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றுவரை இலக்கண இலக்கியப் படைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளதும் வேற்று இன மொழி ஆட்சி அதிகாரங்களுக்கு ஆட்பட்ட நிலையிலும் ‘தனது தனித்தன்மை குன்றாது தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் மொழி’ என அறிஞர் கால்டுவெல் பாராட்டிய தமிழ் மொழிக்கு நூறாண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கைகள் வைத்தும் ஏற்கப்படாத ‘செம்மொழி’ எனும் கோரிக்கையை வென்றெடுத்து அதன் முத்திரைப் பணியாக 2010 சூன் திங்களில் கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை உலக அறிஞர்களையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டாடிப் பெருமை கொண்டவர் தமிழினச் செம்மல் கலைஞர் அல்லவா?
அய்யன் திருவள்ளுவர் கூறியது போல.
“எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்”
என்பதற்கேற்ப நினைவு தெரிந்த நாள் முதல் தாம் ஈடுபட்ட பணி எதுவாயினும், அதில் வாழ்நாள் முழுவதும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தமிழ் மணக்கத் தொண்டுபுரிய வேண்டுமெனும் தணியாத வேட்கையுடன் தமிழ்த் தொண்டாற்றித் தமிழை உலக அரங்கில் உயர்ந்திடச் செய்த உத்தமத் தலைவர் உன்னதத் தலைவர் கலைஞர்! அவர் வாழ்க்கையையே ஐந்தாம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றுவது நன்றியுள்ள தமிழ் மக்களின் குன்றாத கடமை அல்லவா”
கலைஞரின் சமூக நீதி பார்வையில் இதன் உறுதியை வேலுவின் நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. 1945இல் தொடங்கி, வி.பி. சிங்கின் ‘மண்டல் கமிஷன்’ வரையில் இந்த நீண்ட பயணத்தை மாற்றத்திற்கான உறுதியை வேலு இயல்பாய் பதிவு செய்கிறார்.
1945இல் கலைஞர் குடியரசு இதழில் எழுதிய “தீட்டாயிடுத்து” தலையங்கத்தில் தொடங்கி, 1991இல் ஆட்சி கலைக்கப்பட்ட வரைக்கும் இருக்கின்ற வரலாற்றை எடுத்துக்கூறி, பாபு ஜெகஜீவன்ராம் பாராட்டு உரையுடன் கலைஞரின் சமூக நீதிப் பார்வையை பதிவு செய்கிறார் வேலு. தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட மக்களின் பெருந்தலைவர்களில் ஒருவரான ஜெகஜீவன்ராம் வார்த்தைகளில் முன் வைக்கும்போது – தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திராவிடக் குரல் எழுப்பப்படவில்லை என்பதைச் சிறப்பாக முறியடிக்கிறார்.
முதலமைச்சர் பொறுப்பையே கலைஞர் வேண்டாமென்று ஒதுக்கிய வரலாற்றை மிக இயல்பாய் வேலு பதிவுசெய்கிறார். இந்தப் புத்தகத்தின் 77ஆம் பக்கத்தில் அவர் எழுதி இருப்பதை அனைவரும் படிக்க வேண்டும்.
“மாநில முதலமைச்சர் பதவி என்பது ஏதோ சாதாரண கனவுக் காட்சியன்று. அது பல கோடி மக்களைப் பராமரிக்கிற, பாதுகாக்கிற உயர்ந்த பொறுப்பு. பேரறிஞர் அண்ணாவின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்த அந்த முதலமைச்சர் ஆசனத்துக்கு யார் வருவது என்ற வினா எழுந்த நேரம்.
யார்? யார்? என்றெல்லாம் போட்டியாளர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டிய அவசியமே எழாமல் எல்லோரது கரங்களும் சுட்டிக்காட்டியது அண்ணன் கலைஞர் அவர்களைத்தாம். ஆனால், அவரோ, அப்போது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே முதலமைச்சராக வரவேண்டும் என்றார்.
ஆனால் முதலமைச்சர் பதவி என்பது முத்துவேலரின் திருமைந்தர் கலைஞரின் சொந்தச் சொத்தல்ல; முதலமைச்சர் பொறுப்பை யாருக்கு வழங்க வேண்டுமென்று அவர் தீர்மானிக்க முடியாது என்று சொல்லி, முதலமைச்சர் பொறுப்புக்குப் பொருந்துகிற தகுதிகளைக் கொண்டவர் அவரே எனக் கட்சி முடிவெடுத்து அறிவித்தது.
அப்போதும் கூட அவர் முதலமைச்சர் பொறுப்பை நாவலரே ஏற்க வகைசெய்ய வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரே முதலமைச்சராக வரவேண்டுமெனக் கட்சி ஏகமனதாக எண்ணம் கொண்டிருப்பதை அறிந்த நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் பதவிக்கான போட்டியிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டார். அதன் பின்னர்தான் கட்சியின் கட்டளை காரணமாக அண்ணன் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்கச் சம்மதித்தார்.”
கலைஞரின் படைப்புலகத்தை பற்றி விரிவாக வேலு பதிவு செய்கிறார். “நாடகக் கலையின் நற்றமிழ் ஆசான்” என்ற தலைப்பில், நாடகத்தில் அவர் ஏற்படுத்திய புதுமைகளையும் ”காலத்தை வென்ற காவியத் திருமகன்” என்ற பெயரில் கலைஞரின் புதினங்களைப் பற்றியும் ”கலைஞர் படைத்த கலையுலகப் புரட்சி” என்ற தலைப்பில் திரையில் அவர் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றங்களைப் பற்றியும் வேலு பட்டியலிடுகிறார்.
கலைஞரின் படைப்புகளுக்கு மீண்டும் வள்ளுவரைத் துணைக்கு அழைத்து, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். கலைஞரின் படைப்புகளும் இன்று பொதுமறை ஆகிவிட்டதை,
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்”
என்ற குறளின்வழி எடுத்துரைக்கிறார் வேலு.
கலைஞர் கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிடும் வேலு, அந்த ஒவ்வொரு திட்டங்களுக்கு பின் இருக்கக்கூடிய சக மனிதர்கள் மீதிருக்கும் பரிவை ஆழமாகப் பதிவு செய்கிறார். இது தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையிலான தொடர்பாக இல்லாமல், ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் இடையிலான தொடர்பாக இலலாமல், “என் உயிரினும் மேலான உடன்பிறப்பே” என்ற சொற்றொடருக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாய் அவர் வாழ்வு எப்படி இருந்தது என்பதை, இந்தப் புத்தகம் கூறுகிறது.
இந்திய விடுதலைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கலைஞரின் அரசியல் பணி 80 ஆண்டுகள் நீடித்தது. தன்னுடைய கட்சிக்கு 50 ஆண்டு காலம் தலைவராய் இருந்திருக்கிறார். 5 முறை முதலமைச்சராக இருந்த அவர், தேர்தலில் ஒருமுறை கூட தோல்வியைக் கண்டதில்லை.
தமிழ்நாடு அரசியல் சுமார் 70 ஆண்டுகாலம் அவரைச் சுற்றிதான் இயங்கியது. தமிழ்கூறும் நல்லுலகில் மையப் புள்ளியாய் இருந்த ஒருவரின் அரசியல் வெற்றி பெறுவதற்குக் காரணம், திறமைகளும் ஆற்றல்களும் மட்டுமல்ல மாறாக, மக்கள்மீது கொண்டிருக்கும் மாறாத அன்பும் சமூக நீதியும் சமதர்மமும் சுயமரியாதையும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவாவும்தான்.
இதில் கலைஞரின் திறமையைப் பட்டியலிடும் அதே நேரத்தில் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பையும் பதிவு செய்வதன்மூலம் நவீன தமிழ்நாடு இன்று இருக்கும் இந்த இடத்திற்கு எப்படி வந்திருக்கிறோம் என்பதை கலைஞரின் வாழ்க்கையின்மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார் வேலு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் டிராவிட் மகனுக்கு U19 அணியில் இடம்… சாதிப்பாரா?
“ஒரே பேட்டிக்காகவா சவுக்கு சங்கர் மீது 15 எஃப்.ஐ.ஆர்?” – உச்சநீதிமன்றம் கேள்வி!
சிக்கலில் ஃபார்முலா 4 கார் ரேஸ் : உயர்நீதிமன்றத்தில் SDAT அவசர முறையீடு!