20% இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர் என்று விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 28) தொடங்கி வைத்தார்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டுமென ஜெகத்ரட்சகனும், அன்னியூர் சிவாவும் என்னை சந்தித்து மனு கொடுத்தார்கள். அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சொன்னேன். அதை இன்று திறந்து வைத்திருக்கிறேன். இது எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற கலைஞர் கொடுத்த 20 சதவீத இடஒதுக்கீடுதான் காரணம். முதல்வராக பொறுபேற்ற 43 நாட்களில்20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவர். உயிர்த்தியாகம் செய்த 21 பேரின் குடும்பத்தினருக்கு மாதம் தோறும் உதவித் தொகையும் பென்சனும் வழங்கியவர் கலைஞர். அப்போது நடைபெற்ற சாலைமறியலில் கைதான 2 லட்சம் பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் 5 பேர் மீதான வழக்குகளும் திரும்பப்பெறப்பட்டது. ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.
திராவிடம் இங்கு இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளின் பிற்போக்கு கும்பலால் தலைதூக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது திமுக” என்று குறிப்பிட்டார்.