வெள்ளி விழா காணும் உழவர் சந்தை!

Published On:

| By Selvam

Kalaignar Farmers Market Scheme to See Silver Jubilee

தமிழகத்தில் உழவர் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 25ஆவது ஆண்டு விழா (வெள்ளி விழா) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர்கள் சாதனை மலர் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய திட்டமிட்ட அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர், 1998-ம் ஆண்டு ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’வை அமைத்தார். அக்குழு பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

ADVERTISEMENT

அதன்படி, முதல்வர் கலைஞர், தமிழகத்தில் உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 1999 நவம்பர் 14-ம் தேதி தமிழகத்தின் முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அப்போதைய திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

உழவர் சந்தை திட்டம் தொடங்கி 24 ஆண்டுகள் நிறைவுற்று வரும் நவம்பர் மாதம் 25ஆம் ஆண்டான வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதை முன்னிட்டு அந்தந்த உழவர் சந்தைகளின் வளர்ச்சி குறித்து சாதனை மலர் வெளியிடப்பட உள்ளது. இதை தயாரிக்கும் பணியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர்கள் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் மும்முரமாக உள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள வேளாண் துறை அதிகாரிகள், “தமிழகத்தின் மகத்தான திட்டங்களில் உழவர் சந்தை திட்டம் முக்கியமானது. உழவர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பயனுள்ள இத்திட்டம் பல்வேறு காலங்களில் மேம்படுத்தப்பட்டு நவீன வளர்ச்சிகளை கண்டு வந்துள்ளது. ஒவ்வொரு உழவர் சந்தையும் தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலை வரையிலான செய்திகள், படங்கள் ஆகிய விவரங்களை சேகரித்து வருகிறோம்.

பல உழவர் சந்தைகள் ஆரம்பத்தில் சாதாரண அளவில் தொடங்கி தற்போது பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எடைக்கல் தராசுகள் மாற்றப்பட்டு டிஜிட்டல் தராசுகள் வைக்கப்பட்டுள்ளன. வெளி மார்க்கெட் – உழவர்சந்தை விலையை ஒப்பிடும் வகையில் மின்னணு விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநகராட்சி பகுதியில் இல்லம் தேடி பண்ணை காய்கறி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை செய்வதற்காக வாகனம் வாங்க மானியத்துடன் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. 100 கிலோவுக்கு மேல் காய்கறி கழிவு சேரும் உழவர்சந்தைகளுக்கு உரம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விற்பனை மையம் அமைக்க கடைகள் வழங்கப்பட்டுள்ளன. உழவர்களின் விளைபொருட்களை பாதுகாக்க குறிப்பிட்ட சில உழவர் சந்தைகளில் குளிர்பதன கிடங்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இ-சந்தைகள் எனப்படும் ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்படி உழவர் சந்தை திட்டம் பல்வேறு வளர்ச்சிகளை எட்டி உள்ளது. அதைப்பற்றிய தொகுப்புகளை புத்தகமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவர் சந்தை திட்டம் நவம்பர் மாதம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளதால், அப்போது சாதனை மலர் வெளியிடப்பட உள்ளது” என்று கூறியுள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்

ஆசிய போட்டிகள் 2023: 60 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share