எது உண்மை, எது பொய் என அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சு அசலாக இருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தனது நடிப்புத் திறமையால் மட்டுமின்றி நல்லுள்ளத்தாலும் பெரும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். தனது திறமைக்கும், தனக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் அவரது மெழுகு சிலையைத் தயார் செய்து சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் டுஸாடஸ்’ கேலரி பெருமைப்படுத்தியுள்ளது.
இதுவரை பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் பல இடங்களிலும் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ள போதும், அவை பெரும்பாலும் அந்த நபரின் சாயலில் கூட இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துவிடுகிறது. இந்த நிலையில் காஜல் அகர்வாலின் சிலை உருவாகிறது என்ற தகவல் வெளியான போது, அது எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது.
இந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள அந்த சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.

அச்சு அசலாக காஜல் அகர்வாலைப் போன்று உயிரோட்டமுடன் அந்த சிலை காட்சியளிக்கிறது. இதுவரை, சிங்கப்பூர் மேடம் டுஸாடஸ் அருங்காட்சியகத்தில் நெல்சன் மண்டேலா, ஒபாமா, ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், மகாத்மா காந்தி, ராணி எலிசபெத், சச்சின் டெண்டுல்கர், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது காஜல் அகர்வாலின் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. இந்த சிலையைக் காஜல் அகர்வாலே திறந்து வைத்துள்ளார்.
