காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஹாலிவுட் திரை கலைஞர்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை ஆதரித்து கருத்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் இந்திய நடிகையும், பாஜக ஆதரவாளருமான கங்கனா ரனாவத்.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் பணயக் கைதிகளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தி வருவதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் வலுவடைந்து வந்த நிலையில், ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடிதம் ஒன்றை அக்டோபர் 22 அன்று எழுதினார்கள்.

அதில், “உங்கள் நிர்வாகத்திடமும், உலகில் உள்ள அனைத்து தலைவர்களிடமும், புனித பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிறிதும் தாமதமின்றி போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுக்கவும், காசா மீதான குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கவும் உங்களை வலியுறுத்துகிறோம். எங்களின் எதிர்கால சந்ததியினரிடம் நாங்கள் எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்தோம் எனச் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.
ஐநாவின் அவசரகால நிவாரண தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சொன்னதைப்போல ‘வரலாறு பார்த்துகொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள் அவர்களை சென்று சேர அனுமதிக்கவேண்டும்” என குறிப்பிட்ட அந்த கடிதத்தில் சூசன் சரண்டன், கிறிஸ்டன் ஸ்டீவர்ட், குயின்டா புருன்சன், ரமி யூசுப், ரிஸ் அகமது மற்றும் மஹர்ஷலா அலி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இது போன்ற யுத்தம் சம்பந்தமான சம்பவங்களில் திரை நட்சத்திரங்கள் கருத்து சொல்லாமல் கடந்து சென்று விடுவது வாடிக்கை. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வலிமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதில் ஹாலிவுட் கலைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக ஆதரவு நடிகையான கங்கனா ரனாவத் இஸ்ரேல் யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Had a very soulful meeting with Israel’s ambassador to Bharat Shri Naor Gilon ji.
आज पूरी दुनिया, ख़ासकर इज़राइल और भारत आतंकवाद के ख़िलाफ़ अपनी जंग लड़ रहे हैं । कल जब मैं रावण दहन करने दिल्ली पहुँची, तो मुझे लगा कि इज़रायल एम्बेसी आकर उन लोगो से मिलना चाहिए जो आज के आधुनिक… pic.twitter.com/syCkDxJCze— Kangana Ranaut (@KanganaTeam) October 25, 2023
இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நோர் கிலோனனை (Naor Gilon) நடிகை கங்கனா ரனாவத் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து பேசிய அவர், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள கங்கனா, “இன்றைக்கு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவும் இஸ்ரேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன. நேற்று டெல்லியில் ராவணனை எரிக்க சென்றபோதே, இன்றைய நவீன ராவணனான ஹமாஸை தோற்கடிக்க போராடும் இஸ்ரேல் தூதரகத்துக்குச் செல்லவேண்டும் என நினைத்தேன். சிறு குழந்தைகளும் பெண்களும் குறிவைக்கப்படுவது மனதை உலுக்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
We wish to convey our heartfelt gratitude to @KanganaTeam for her visit to the Embassy and for extending her unwavering solidarity with #Israel during these challenging times. 🙏#IStandWithIsrael pic.twitter.com/9SlHgJv3Lu
— Israel in India (@IsraelinIndia) October 25, 2023
இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நோர் கிலோன் தனது எக்ஸ் பக்கத்தில், “தனது படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்திருந்த நடிகை கங்கனா டெல்லியில் உள்ள தூதரகத்துக்கு வந்து சந்தித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கங்கனா மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய நண்பர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்

Comments are closed.