கூடுதல் வங்கி வசதி – கடம்பூர் மலைப்பகுதி மக்கள் கோரிக்கை!

Published On:

| By admin

சமீபத்தில் உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடம் பிடித்தது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் கூடுதலாக வங்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மலைகிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், பசுவானபுரம், போட்ட மாளம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். கடம்பூர் மலைப்பகுதி வட்டாரத்தில் இந்த ஒரே ஒரு வங்கி கிளை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் கடம்பூரில் உள்ள இந்த வங்கிக் கிளையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கணக்கு வைத்திருப்போர் நீண்ட வரிசையில் நின்று செல்வதால் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறுகையில், “கடம்பூர் மலைப்பகுதி வட்டாரத்தில் ஒரே ஒரு வங்கி மட்டுமே இருப்பதால் நாங்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். இதில் பலர் 29 கிலோமீட்டர் தூரமுள்ள சத்தியமங்கலம், இன்னும் சிலர் 22 கிலோமீட்டர் தூரமுள்ள கே.என். பாளையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வங்கிகளில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர். எனவே கடம்பூர் மலைப்பகுதியில் கூடுதலாக வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share