தீவிரமாகும் ‘கச்சத்தீவு’ விவகாரம்: தமிழக அரசியல் தலைவர்கள் ரியாக்சன் என்ன?

Published On:

| By indhu

Kachchathivu Issue: Opinion of Political Party Leaders

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அலட்சியமாகச் செயல்பட்டதாக பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்க்கட்சிகளை சாடிய நிலையில், அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அப்படியே அந்தர் பல்டி அடிப்பது ஏன்?

கச்சத்தீவு விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 27-1-2015 அன்று வெளியிட்ட ஆர்டிஐ பதிலை பார்க்க வேண்டும்.

அப்போது ஜெய்சங்கர் தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என நான் நம்புகிறேன். அந்த ஆர்டிஐ-யின் பதில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சரும், அவரது அமைச்சகமும் அப்படியே அந்தர் பல்டி அடிப்பது ஏன்?

சுறுசுறுப்பான வெளியுறவுத்துறை அதிகாரி முதல் புத்திசாலித்தனமான வெளியுறவுத்துறை செயலாளர் வரை திறமையான அதிகாரியாக இருந்தவர் இப்போது ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளில் மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்படுவது உண்மைதான். ஜெய்சங்கர் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு எதிராகப் பேசுகிறார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படவில்லையா?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு.. திசைத்திரும்பும் செயல்!

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாஜகவையும் மிக அதிக அளவில் வெறுக்கிற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடலில் மீன்பிடிக்கிற உரிமையை மீனவர்களுக்கு பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பாஜக அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சனையை திசைத்திரும்பும் செயலாகும்.

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தையும் கடந்த 2020ம் ஆண்டு முதல் சீனா ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆனால், பிரதமர் மோடி இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கருத்து கூறியதை விட தேசத்துரோக செயல் வேறு என்ன இருக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்: திமுகவினரின் கேள்விகள்:

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளதாவது, “ மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்… என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வர முடியாதது ஏன்?

2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?

இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா?

மற்றொரு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டி வரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு, சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது?

இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா?”என மத்திய அரசிற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

10 வருடமாக என்ன செய்தீர்கள்?

கச்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக எம்.பி. தயாநிதி மாறன், “ஒருவரைப் பற்றி குறைகூறும் முன் உங்கள் முதுகை திரும்பிப் பாருங்கள். 10 வருடமாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜக ஏன் கச்சத்தீவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஏன் எதுவும் செய்யவில்லை? தேர்தல் சமயத்தில் தேர்தல் பத்திர மோசடி, PM cares ஊழல், சிஏஜி அறிக்கை இதையெல்லாம் திசை திருப்பத்தான் கச்சத்தீவு குறித்துப் பிரதமர் மோடி பேசிகிறார்”எனக் கூறியுள்ளார்.

கண்ணுக்கு முன் நடப்பதை தடுக்க முடியாத மோடி

விசிக எம்.எல்.ஏ. ஆளுர் ஷா நவாஸ் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசியதாவது, “கச்சத்தீவு பற்றி கடந்த 10 ஆண்டுகளாக பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி பேசிக் கொண்டிருக்கும் போதே, இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது சீனா.

இன்று கண்ணுக்கு முன் நடப்பதை தடுக்க முடியாத மோடியா, என்றோ கைவிட்டுப் போன கச்சத்தீவை மீட்பாரா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காந்தி இறந்துவிட்டாரா? என்பது போல் இருக்கிறது! – சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் குறித்து தற்போது பேசுவது, என்ன காந்தி இறந்துவிட்டாரா? என்பது போல் இருக்கிறது.

1974ஆம் ஆண்டு நடந்த ஒரு விவகாரத்தை பிரதமர் மோடி தற்போது ஏன் பேச வேண்டும்?

அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் வைத்துதான்”எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்: பாஜகவினரின் கருத்து

பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 1) கூறியதாவது, “கச்சத்தீவு குறித்து வெளியுறவுத் துறையில் ஆர்.டி.ஐ. மூலம் தகவல்களை பெற்றேன்.

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லையை காங்கிரஸ் தனது ஆட்சியில் விட்டுக்கொடுத்துள்ளது.

கச்சத்தீவு குறித்து கருணாநிதி பேசிய இரண்டாவது ஆவணம் வெளியிடப்படும், அதில் அனைத்து உண்மைகளும் தெரியவரும்.

இதுநாள் வரை காங்கிரஸ் கட்சியினர் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக திமுகவினர் கூறி வந்தனர். ஆனால், கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும் முக்கிய பங்கு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

உண்மைக்கு புறம்பான பிரச்சாரம்!

தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கச்சத்தீவு பற்றி இன்று வரை உண்மைக்கு புறம்பாக திமுக பிரச்சாரம் செய்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு”என விமர்சித்துள்ளார்.

திமுகவின் கபட நாடகம்!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “கச்சத்தீவு பிரச்சனையில் காங்கிரஸ், திமுகவின் கபட நாடகம் அம்பலமாகி உள்ளது.

பாஜக தலைவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்வதறியாமல் திகைத்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் மீனவ மக்கள் பாடம் புகட்டுவர்”எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்து

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்!

ஜனாதிபதிக்கு அவமரியாதை… பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share