க.மு. க.பி : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

KA mu ka pi movie review april 2025

சிறப்பானதாக மாறத் தவறிய ‘நல்முயற்சி’!

’ஏனோதானோன்னு எதையாவது பண்ணிட்டு இருக்காதே’ என்று உறவுகள், நட்புகளிடம் ’உரிமை’ எடுத்துக்கொண்டு பேசுகிற வழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு. அந்த ‘ஏனோதானோ’ எனும் சொல்லுக்குப் பொருத்தமானவற்றை வெளியுலகிலும் சில நேரங்களில் காண நேரும். கொஞ்சம் நெருங்கிச் சென்று நோக்கினால், அவற்றில் இருக்கும் சீரிய நோக்கம் தெரிய வரும். திரையுலகிலும் அப்படிச் சில ‘ஏனோதானோ’க்களாக தெரிய வருபவை, கொஞ்சமாய் உற்றுநோக்கினால் வேறொரு ‘முகம்’ காட்டும். அப்படியொன்றாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘க.மு. க.பி.’ பட ட்ரெய்லர். KA mu ka pi movie review april 2025

புதுமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் ஆக்கியிருக்கும் இப்படத்தில் விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன், டிஎஸ்கே, பிரியதர்ஷினி, நிரஞ்சன், அபிராமி முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

’க.மு. க.பி’ தரும் திரையனுபவம் எத்தகையது?

காதலர்களின் கதை!

’க.மு. க.பி.’ என்ற டைட்டிலோடு ‘கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின்’ என்ற டேக்லைன் இருக்கிறது. அதுவே அதற்கான விளக்கமாகவும், படத்திற்கான கதைச்சுருக்கமாகவும் உள்ளது.

ADVERTISEMENT

ஒரு காதல் ஜோடி. கல்யாணத்திற்கு முன் நிறைய காதலிக்கின்றனர். கல்யாணம் செய்துகொண்ட பின்னர், ‘அந்த காதல் எங்கே போனது’ என்று தேடுகின்றனர். அது தங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறதா அல்லது வேறொரு ரூபத்தில் குடி கொண்டிருக்கிறதா என்று பகுத்தறிந்து பார்க்கிற தெளிவு அவர்களிடத்தில் இல்லை.

அதற்குள் மூன்றாண்டுகள் ஓடு விடுகின்றன. ஊடல்களை மீறி, இருவருக்கும் இடையேயான அன்யோன்யத்தில் ஒரு கருவும் உருவாகிறது. ஒருநாள் அது பறிபோகும் சூழல் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

அதற்குப் பின்னர், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். அவர்களது காதல் முடிவுக்கு வந்ததா, இல்லையா என்பதைச் சொல்வதோடு படம் நிறைவடைகிறது.

அந்த ஜோடி குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அதனால், ‘க.மு. க.பி.’ திரைக்கதையில் பிளாஷ்பேக்குகள் அதிகம்.

அதேநேரத்தில், இதிலுள்ள காட்சிகள் ‘நான்லீனியர்’ முறையில் திரையில் இடம்பெறுகின்றன.

’இது காதலர்களின் கதை. அவங்க காதலிச்சாங்க.. பிரிஞ்சாங்க.. இதுல என்னப்பா புதுசா இருக்கு’ என்பவர்களுக்காகவே நாயக பாத்திரம் படம் இயக்கும் வாய்ப்பு தேடித் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வதாகக் காட்சிகள் வருகின்றன. அப்படிக் கதை விவரிக்கிற பகுதியில் சித்தரிக்கப்படுகிற காட்சிகளில் வேறொரு ஜோடி வருகிறது. ஆனால், நாயகன் தனது சொந்தக் கதையைத்தான் அதில் காட்சிகளாக விவரிக்கிறார்.

ஆகையால், ஒரு கதையில் என்ன நடந்தது என்பதை இரு வேறு ஜோடிகள் வழியாக நாம் அறிய வேண்டியிருக்கிறது. அதுவே ‘க.மு. க.பி.’ படத்தின் சிறப்பு.

குழப்பமூட்டுகிற காட்சிகள்!

பெரிதாக ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத நடிப்புக்கலைஞர்களை வைத்துக்கொண்டு உணர்ச்சிபூர்வமாகக் கதை சொல்வதென்பது ‘முயலிடம் கொம்பு’ தேடுகிற கதை தான். ஆனால், சிலர் அதையும் சாதிப்பதுண்டு. அதில் ஒருவராகத் தெரிகிறார் இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

இப்படத்தில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் ‘குளோஸ் அப்’ ஷாட்களில் காட்டப்படுவதன் பின்னணியில் இயக்குனரின் நம்பிக்கையே இருக்கிறது.

அதேநேரத்தில், அவரது எண்ணத்திற்கு ஈடுகொடுத்து, பட்ஜெட் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் பிரேம்களை வடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.எம்.சுந்தர்.

கலை இயக்குனர் கார்த்திக் அதற்கேற்ற பின்னணியை அமைத்து தந்திருக்கிறார்.

இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருப்பவர் தர்ஷன் ரவிகுமார். ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வெழுந்தாலும், அதனை மறந்து காட்சிகளோடு ஒன்றுகிற அளவுக்கு இசையைத் தந்திருக்கிறார்.

ஷாம்நாத் இசையில் அமைந்த பாடல்கள் காதுகளை துன்பப்படுத்தாமல் நம்மைக் கடக்கின்றன.

‘நான்லீனியர்’ முறையில் வடிவமைக்கப்பட்ட திரைக்கதைக்கு ஏற்றவாறு, எது சமகால நிகழ்வு என்பதை ரசிகர்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுவது படத்தொகுப்பாளரின் கடமை. அதனைக் கையாண்டிருக்கும் சிவராஜ் பரமேஸ்வரன் அவ்வாறு செயல்படவில்லை. அதனால், முன்பாதியில் காட்சிகள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. ’ஒரே கதையில ஏன் ரெண்டு ஜோடி வருது’ என்ற கேள்வி முளைக்கக் காரணமாகிறது படத்தொகுப்பு.

சினிமாவுக்கான கதை சொல்லலையும், வழக்கமாகத் திரையில் விரிகிற கதையையும் வேறுபடுத்திக் காட்டியிருந்தால் இன்னும் சில காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். அதன் வழியே, திரைக்கதையை வித்தியாசமாக வடிவமைத்ததற்கான நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

அது நிகழாத காரணத்தால், பல நல்ல காட்சிகள் சரியானதொரு வரிசையில் அடுக்கப்படாதது போன்ற தோற்றமே உருவாகிறது.

அந்த குழப்பத்தை மீறிப் படத்தை ரசிக்க, அக்காட்சிகளின் உள்ளடக்கம் சிறப்பாக இருப்பதே காரணம்.

திரைக்கதையில் இப்படியொரு குழப்பம் ஏற்படுவதன் பின்னால், பல காரணங்கள் இருக்கக்கூடும். சில காட்சிகளைப் படம்பிடிக்க முடியாமல் போயிருக்கலாம். கூடுதலாகச் சிலவற்றைச் சேர்க்கிற சூழல் அமையால் போயிருக்கலாம்.

அனைத்தையும் மீறி, ஒரு படைப்பு திரையில் என்ன மாயாஜாலத்தை ஏற்படுத்துகிறது என்பதே அனைவராலும் கவனிக்கப்படும். அந்த வகையில் ‘க.மு. க.பி.’ ஒரு நல்முயற்சியாக மட்டுமே தெரிகிறது. மிகச்சிறப்பான படைப்பாகக் காட்சியளிக்கவில்லை. அவ்வாறு மாறுகிற வாய்ப்புகளையும் தவறவிட்டிருக்கிறது.

ஆனாலும், ’ஒரு திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுகிற அனைவருமே அர்ப்பணிப்போடும் காதலோடும் பணியாற்றினால் இப்படித்தான் அதன் விளைவு இருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது ‘க.மு. க.பி.’. அப்படிப்பட்ட முயற்சிகள் மட்டுமே திரையோடு ரசிகர்களைப் பிணைக்கும்.

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share