இனி, தபால் அலுவலகங்களில் 50 ரூபாய் செலுத்தி கணக்குத் தொடங்கினால், வங்கி பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம். கார்டு பெறமுடியும். பணம் எடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் கிடையாது என தபால் துறை அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பணப் பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கவும் பெரும்பாலான மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் வங்கிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தபால் துறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வகையில், 50 ரூபாய் செலுத்தி தபால் அலுவலகங்களில் கணக்கைத் தொடங்கலாம் என அறிவித்துள்ளது. அதன்படி பாஸ் புக், ஏ.டி.எம். கார்டு பெற்று, பணப் பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்டம், சேவூர் தபால் நிலைய துணை தபால் அதிகாரி சுப்ரமணியம், ‘தபால் ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி எந்த தபால் நிலையத்திலும் பிற வங்கி ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க முடியும். அதேபோல், ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தவும் எடுக்கவும் முடியும். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது’ எனத் தெரிவித்துள்ளார்.
வங்கிகளைப் போலவே, தபால் நிலைய சேமிப்புக் கணக்குக்கு 4% வட்டி வழங்கப்படும். ‘போஸ்ட் பேமென்ட் பேங்கிங்’ என்ற புதிய திட்டத்தில் 4.5% – 5.5% சதவிகிதம் வரை ‘டெபாசிட்’ வட்டியை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
