மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: தம் ஆலு

கிச்சன் கீர்த்தனா: தம் ஆலுவெற்றிநடை போடும் தமிழகம்

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான். இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்க இந்த தம் ஆலுவைச் செய்து பரிமாறலாம். வட இந்திய விருந்துகளில் இது தவறாமல் இடம்பெறும்.

என்ன தேவை?

குட்டி உருளைக்கிழங்கு - அரை கிலோ (வேகவைத்து, தோலுரிக்கவும்)

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று

பட்டை - ஒரு சிறிய துண்டு

லவங்கம் - 2

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 3 பல்

தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு

மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்

கெட்டியான தயிர் - அரை கப்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி உருளைக்கிழங்கைப் போட்டு, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துப் பொன்னிறமாக வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் அதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், பிரியாணி இலை, வதக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிர் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் கொதிக்கவிடவும். மேலே கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு

பெரிய உருளைக்கிழங்கைப் பயன்படுத்தினால் வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கி பயன்படுத்தவும்.

வெள்ளி, 27 நவ 2020

chevronLeft iconமுந்தையது