இன்று பலரும் நமது பாரம்பர்ய உணவுகளை மறந்துவிட்டுப் பல்வேறு அவசர உணவு வகைகளை அள்ளிக்கொட்டிக் கொள்கிறோம். இந்தக் கருப்பட்டி அவலை ரிலாக்ஸ் டைமில் சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
எப்படிச் செய்வது?
ஒரு கப் கெட்டி சம்பா அவலை இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும். பின்னர் ஒரு கப் வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். அரை கப் கருப்பட்டியைப் பொடியாகத் துருவிக்கொள்ளவும். ஓர் அகலமான, கனமான வாணலியில் கருப்பட்டியைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அவலைத் தண்ணீர் இல்லாமல் மெதுவாகப் பிழிந்துகொள்ளவும். வடிகட்டிய கருப்பட்டியைச் சிறிது சிறிதாக ஊறவைத்த அவலோடு சேர்த்துக் கிளறி, அரை கப் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
சிறப்பு
உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியைத் தரும். அவல் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.