மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சிறப்புக் கட்டுரை: நீல வானமும், தூய்மைக் காற்றும் ஓசோன் தினமும்!

சிறப்புக் கட்டுரை: நீல வானமும், தூய்மைக் காற்றும் ஓசோன் தினமும்!

நிலவளம்.கு.கதிரவன்

உலக அளவில் சுமார் 6.5 மில்லியன் அகால மரணம் ஏற்பட்டதாக 2016 ஐ.நா புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில வளரும் நாடுகளைப் பொறுத்து பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியோர், விகிதாசாரப்படி அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக சுற்றுச் சூழல் சீரழிவுதான் பெரும் பங்கு வகிக்கிறது.

உலகளவில் 13.7 மில்லியன் மரணங்களில் 8.5 மில்லியன் சுற்றுச் சூழல் காரணங்களால் இதய நோய், நாள்பட்ட சுவாச நோய், கேன்சர், தற்செயலான காயங்கள், சுவாச தொற்று, பக்க வாதம், வயிற்றுப் போக்கு, சர்க்கரை நோய், மலேரியா, மற்றும் பிறக்கும் போதே இறக்கும் குழந்தைகள் என முதல் பத்து இடம் வகிக்கிறது.

தூய்மையான காற்றின் தேவையை வலியுறுத்தி இவ்வாண்டு, கடந்த செப்டம்பர் 7-ஆம் நாளை “நீல வானங்களுக்கான சர்வதேச தூய்மையான காற்று நாள்” என அன்றைய தினத்தை முதல் முறையாக குறிப்பிட்டு கடைபிடிக்கப்பட்டது. இந் நாளின் முக்கிய நோக்கமாக உடல் நலம், உற்பத்தித் திறன், பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு தூய்மையான காற்று முக்கியம் என்பதை தனி நபர், சமூகம், பெரு நிறுவனங்கள், மற்றும் அரசு என அனைத்து மட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உலகின் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச் சூழல் சவால்களின் தொடர்பு மற்றும் இவற்றை எதிர்கொள்ள தூய்மையான காற்றின் நெருங்கிய தொடர்பை நிரூபித்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான செயலறிவு, நடைமுறை சார்ந்த வெற்றிக் கதைகள், புதுமைகள் போன்றவற்றை விளக்கி ஊக்குவித்தல், மற்றும் தூய்மையான காற்றைப் பேணுவதற்கு ஒருங்கிணைந்த தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அணுகுமுறைகளில் வேகம் பெறுவதற்கான கூட்டு முயற்சியை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காகவும், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இலக்கை எட்டுவதற்கான முயற்சியாகவும் கடைபிடிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது மன்றம் 19.12.2019 அன்று கூடிய 74ஆவது அமர்வின்போது, தூய்மையான காற்றின் தேவைக்கான தீர்மானத்தை இயற்றி, சர்வதேச தினத்தை கடைபிடிக்க வசதியாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்ட ( United Nations Environmental Programme – UNEP ) அமைப்பிற்கு உரிய அறிவுரை வழங்கியதின் விளைவாக செப்டம்பர்-7 முக்கியத்துவம் பெறுகிறது.

தூய்மையற்ற காற்றால் ஏற்படும் பாதிப்பு :

தூய்மையற்ற காற்றால் மனிதர்களுக்கு உடல் நல பாதிப்பும், காலநிலை தாக்கமும் ஏற்படுகிறது. காற்று மாசுபாட்டின் சிறிய கண்ணுக்குத் தெரியாத துகள்கள் நம் நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் உடல்களில் ஆழமாக ஊடுருவி பக்க வாதம், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது. சூரிய ஒளியில் பலவிதமான மாசுபடுத்திகளின் தொடர்பால், இதன் மூலம் உருவாகும் தரைமட்ட ஓசோன் ( Ground Level Ozone ) வழியாக நாள்பட்ட சுவாச நோய் மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகள் ஏற்படுகிறது.

காற்று மாசுபடுத்திகள் ( Pollutants ) சுகாதார விளைவுகளை ஏற்படுத்துவதோடு, கிரகத்தின் வெப்பமயமாதலுக்கும் காரணமாக அமைகிறது. இத்தகைய மாசுபடுத்திகள் வளி மண்டலத்தில் சில நாட்கள் அல்லது பல மாதங்கள் நீடிப்பதால் இவற்றை குறைப்பதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் கால நிலை நன்மைகள் கிடைக்கும்.

ஓசோன் படலம் மெலிவடைதல் :

ஓசோன் படலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 கி.மீ உயரத்தில் உள்ளது. சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் நம்மை ஓசோன் படலம் பாதுகாக்கிறது. இப்படலம் பல மாசுக்களினால் அழிக்கப்படுகிறது. குறிப்பாகக் குளோரோ ஃபுளோரோ கார்பன் என்ற வேதிப் பொருள் முக்கிய காரணமாகும். இவ் வேதிப் பொருள் இயற்கையாக கிடைப்பதில்லை. செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. குளிர்ப்பதனப் பெட்டிகள், குளிர்விக்கும் பெட்டிகள், தீயணைப்புப் பெட்டிகள், ஏரோசோல் டின்களில் முன் செலுத்தியாகவும், பிளாஸ்டிக் பொருளாகவும், மின்னணுத் தொழிற்சாலைகளில் கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஓசோன் படலம் மெலிவடைவதால், புற ஊதாக் கதிர்களின் வீச்சில் நமது நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. இதனால் நோய் ஏற்படுகிறது. மீன் வளம் பாதிப்படைகிறது. விவசாய விளைச்சல்கள் குறைகிறது. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் உலகமயமாக்கல் விளைவால் ஏற்பட்ட நமது வாழ்க்கை முறை, தொழிற்சாலை புகை, தனி நபர்கள் பயன்படுத்தும் வாகனங்களால் ஏற்படும் புகை, மரம் மற்றும் மண்ணெண்ணெய் எரி பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் வளிமண்டலம் சூடாகி ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபாடு உலகளாவிய பிரச்சினை :

காற்று மாசுபாடானது மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் முதன்மைக் காரணமாக உள்ளது. காற்று மாசுபாட்டால் மனித இறப்பு மற்றும் நோய்கள் பெருகி வருகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதில் போதிய இடையீடும், கவனமும் இல்லாத பட்சத்தில் அகால மரணமும், பாதிப்பும், 2050ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரிக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

வளரும் நாடுகளில் பொருளாதாரம், வேலைத் திறன், சுகாதார செலவுகள் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் எதிர்மறை தாக்கங்களுக்கு காற்று மாசுபாடு முதன்மை ஊக்கியாக உள்ளது. காற்று மாசுபடுத்திகளான கார்பன், மீத்தேன், மற்றும் தரைமட்ட ஓசோன் வாயுக்கள் வெளியேற்றம் ஐ.நா வரையறுத்த வரம்புகளைவிட அதிகமாக உள்ளதும் ஒரு காரணமாகும்.

ஐ.நாவின் துணை அமைப்புகளான WHO, UNEP – ஐ.நாவின் சுற்றுச் சூழல் திட்ட அமைப்பு – கால நிலை மற்றும் சுத்தமான காற்றிற்கான கூட்டமைப்பு ( Climate & Clean Air Colition ) மற்றும் உலக வங்கி இணைந்து “சுவாச வாழ்க்கை சமூகம்” ( Breath Life Committee ) என்ற குழுவை உருவாக்கி, காற்று மாசுபாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது வரை இதில் 69 நாடுகளின் நகரம், மற்றும் பெரு நகரங்கள், பிராந்தியங்களுக்குட்பட்ட 296 மில்லியன் மக்கள் இணைந்துள்ளனர்.

காலநிலை மாற்ற விளைவுகள் :

காலநிலை மாற்ற விளைவாக உணவு உற்பத்தியில் அச்சுறுத்தல், கடல்மட்ட உயர்வால் பேரழிவு தரும் வெள்ள அபாயம், பூமியில் வாழும் பல கோடி மனிகர்கள் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் பசுமை இல்ல வாயுக்களில் தாக்கம் போன்ற சீர்கேடுகள் ஏற்படுகிறது. பசுமை இல்ல வாயுக்களானது சூரியனின் வெப்பத்தை மீண்டும் பிரதிபலிக்காமல் காத்து பூமியை வாழக் கூடிய பகுதியாக வைத்திருப்பது இதன் முக்கிய பணியாகும். ஆனால் தொழில்மயமாதல், காடழிப்பு போன்றவற்றால் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவு கடந்த 3 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்போது பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் ஒட்டுமொத்த நிலையும் உயர்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான குழுவானது, காலநிலை மாற்றங்களுக்கான புறநிலை ஆதாரங்களை வழங்குவதற்காக ஏற்படுத்திய “உலக வானிலை அமைப்பும்” ( World Metrological Organisation ) ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பும் இணைந்து வழங்கிய ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும், ஒட்டுமொத்த கார்பன்டை ஆக்ஸைடின் வெளியேற்றம், வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக கட்டுப்படுத்துவதில் 2011ஆம் ஆண்டிற்குள்ளாகவே வெளியேற்றிவிட்டோம் என்று கூறுகிறது.

1880 முதல் 2012 வரை சராசரி உலக வெப்பநிலை 0.85 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 1901 முதல் 2010 வரை உலக சராசரி கடல் மட்டம் 19 செ.மீ உயர்ந்துள்ளது. இந்நிலை நீடித்தால் 2065ஆம் ஆண்டில் சராசரி கடல் மட்ட உயர்வு 24 முதல் 30 செ.மீட்டரும், 2100க்குள் 40 முதல் 63 செ.மீட்டரும் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு நிறுத்தப்பட்டாலும் காலநிலை மாற்றத்தின் பெரும்பாலான அம்சங்கள் பல நூற்றாண்டுகள் நீடிக்கும் என்று மதிப்பீட்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி இல்லாமல் பூமியில் வாழ்க்கை இல்லை. ஆனால் சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் ஓசோன் படலம் வழியாக வராவிட்டால் பூமியில் உயிர்கள் செழித்து வளர வாய்ப்பில்லை. சூரிய ஒளி வாழ்க்கையை சாத்தியமாக்குகிறது. ஆனால் ஓசோன் அடுக்கு வாழ்க்கையை நாம் அறிந்தபடி சாத்தியமாக்குகிறது. எனவே இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். கடந்த கால முழக்கம் “வாழ்க்கைக்கான ஓசோன்” – பூமியில் வாழ்வதற்கு ஓசோன் முக்கியமானது” என்பது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்காக, ஓசோன் படலத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.

( செப்டம்பர்-16 – உலக ஓசோன் தினம் )

தொடர்புக்கு: [email protected]

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon