மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: முட்டை - 85

கிச்சன் கீர்த்தனா: முட்டை - 85

பெண்களைப் பொறுத்தவரையில் முட்டையைச் சாப்பிடுவதால் அதில் உள்ள பையோடின் முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவதால்... அதில் உள்ள ஃபோலேட் (Folate) என்னும் வைட்டமின், தாயின் ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

என்ன தேவை?

முட்டை - 2

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப் பழம் - கால் மூடி (சாறு எடுக்கவும்)

கொத்தமல்லித்தழை, புதினா இலை - இரண்டும் சேர்த்து ஒரு பிடி விழுது

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் முட்டை, மஞ்சள்தூள், சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். குழிவான கிண்ணத்தில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை இத்துடன் சேர்த்து இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும். ஆறியவுடன் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது சிறிது உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் வேகவைத்த முட்டைத் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது