மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சமாளிக்க எடப்பாடி வியூகம்!

டிஜிட்டல் திண்ணை:  சசிகலாவை சமாளிக்க எடப்பாடி வியூகம்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“அதிமுகவில் சில நாட்களுக்கு முன் 29 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கான மாவட்டச் செயலாளர்களும், அமைப்புச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஆங்காங்கே சலசலப்புகள் இதை ஒட்டி எழுந்தாலும் கட்சிக்குள் பெரிய அளவு எதிர்ப்பு இன்னும் எழவில்லை. இதுகுறித்து கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக வேறு ஒரு திட்டத்தை தயாரித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கட்சியில் இப்போது எந்தப் பதவியிலும் பொறுப்பிலும் இல்லாத சீனியர்களை தன் வீட்டுக்கு இரவு வரச் சொல்லுகிறார். அவர்களிடம் தற்போது கட்சி எப்படி இருக்கிறது. இன்னும் கட்சியை வலுப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பேசுகிறார். அவர்களில் பலர் எம்.ஜிஆர் கையில் கட்சி இருந்தபோது தொண்டர்களின் கட்சியாகவும், நிர்வாகிகளின் கட்சியாகவும் இருந்தது. ஜெயலலிதாவிடம் வந்தபிறகு சில ஆண்டுகள் அதே நிலை நீடித்தது. ஆனால் 91 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் மெல்ல மெல்ல கட்சியிலும் ஆட்சியிலும் பரவி ஜெயலலிதா காலமாகும் வரை அவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஜெயலலிதாவுக்குப் பின்னும் சசிகலாவின் ஆதிக்கம் தொடர்ந்த நிலையில்தான் ஓ.பன்னீர் அதற்கு மணி கட்டினார். இப்போது தொண்டர்களும், நிர்வாகிகளும் சுந்திரமான ஒரு அதிமுகவாக இது இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் சசிகலாவின் ஆதிக்கத்துக்குப் பின் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. திமுகவில் இருப்பது போலவே பல மூத்த தலைவர்கள் அதிமுகவில் கோலோச்சினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களோடு நெருங்கிப் பழகி பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அவர்களை எல்லாம் திட்டமிட்டு சசிகலா கும்பல் வேறு வேறு காரணங்களைச் சொல்லி வெளியேற்றிவிட்டது. இதில் பலர் இப்போது திமுகவில் இருக்கின்றனர். சிலர் அமைதியாக அதிமுகவிலேயே இருக்கின்றனர். இவர்களை எல்லாம் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பழைய அதிமுகவாக இது மாறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதுபற்றி யோசித்த எடப்பாடி, நல்ல யோசனைதான் இது என்று பாராட்டியபடி தனது கொங்கு சீமையில் இருந்தே இந்த நடவடிக்கையை தொடங்கிவிட்டார். கொங்கு பகுதி அதிமுகவில் செல்வாக்கு பெற்று பின் திமுகவுக்கு சென்றுவிட்டவர்கள் என்றால் ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, சேலம் செல்வகணபதி உள்ளிட்ட பலர் உண்டு. இவர்களில் முக்கால்வாசி பேர் அப்போதைய சசிகலா குடும்பத்தின் டார்ச்சர் தாங்காமல்தான் திமுகவுக்குப் போனார்கள். இப்போது அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியே போன் போட்டு பேசுகிறார். உங்களோட ஆதரவும் அனுபவமும் இப்பதான் அதிமுகவுக்கு ரொம்ப தேவை. நீங்க அழகுபார்த்து வளர்த்த கட்சிக்கு மறுபடியும் வந்துடுங்க. உங்களுக்கு உரிய எல்லா மரியாதையும் கௌரவமும் இங்க கிடைக்கும் என்று பேசுகிறாராம். அதேபோல தென் மாவட்டத்தில் பிரிந்து போன பலருக்கும் சீனியர்கள் சிலரை விட்டு பேசியிருக்கிறார் எடப்பாடி.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டால் அதிமுக கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி ஏற்பாடு செய்கிற கலவை வியூகம்தான் இது. ஆனால் அன்று வெளியே போன பலர் இன்று திமுகவில் நல்ல பொசிஷனில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர், ‘கண்ணு முன்னாடி எங்க திமுக ஆட்சி தெரியுது. இப்ப போய் பழைய பாசம், சென்டிமென்ட் பேசிக்கிட்டிருந்தா என்ன பண்றது?’ என்று சிலர் தங்கள் வட்டத்தில் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் எடப்பாடியின் பழைய அதிமுகவை கட்டியெழுப்பும் வியூகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சிலர் விழலாம், சிலர் நழுவலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon