மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: மோர் கூழ்

கிச்சன் கீர்த்தனா: மோர் கூழ்

வெளியிலே அடிக்கிற வெயிலுக்கு ஊரடங்கு நேரத்திலே வீட்டுக்குள்ளேயும் உட்கார முடியலை. வெளியிலேயும் போக முடியலை. உடம்பை அசத்துது என்பவர்களுக்கு உடல் சூட்டைத் தணிக்கும் மோர் கூழைவிடச் சிறந்த காலை உணவு எதுவும் இருக்காது. நம் நாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளில் மோர்க் கூழுக்குத் தனி இடமுண்டு. தேவையான பொருள்களெல்லாம் கையிலிருந்தால் பத்தே நிமிடங்களில் மோர் கூழ் ரெடி.

என்ன தேவை?

கோதுமை மாவு அல்லது அரிசி மாவு - ஒரு கப்

தண்ணீர் - இரண்டரை கப்

கெட்டி மோர் - ஒரு கப்

தாளிக்க:

நல்லெண்ணெய் - கால் கப்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கனமான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுப்பின் தணலை முற்றிலும் குறைத்துவிட்டு, சிறிது சிறிதாக அரிசி மாவு அல்லது கோதுமை மாவை அதில் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கைவிடாமல் கிளறவேண்டும். அரிசி மாவு / கோதுமை மாவு நன்றாக வெந்து அல்வா பதத்துக்கு வந்தவுடன், அதில் மோர் சேர்க்கவும்.

மீண்டும் கைவிடாமல் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் வேளையில் அடுப்பை அணைத்து, எண்ணெய் தடவிய தட்டில் களியைக் கொட்டவும். நன்றாக ஆறிய பிறகு, துண்டு துண்டாக வெட்டிச் சாப்பிடலாம். விருப்பப்பட்டால், வறுத்த மோர் மிளகாயை அதோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி கிச்சடி

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது