மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

முக்கியமான மூன்று வழக்குகள்: விசாரிக்கும் ஒரே நீதிபதி!

முக்கியமான மூன்று வழக்குகள்: விசாரிக்கும் ஒரே நீதிபதி!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், பிசிஆர் நீதிமன்றங்களில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒரே நீதிபதி மட்டும் விசாரிக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திருப்பாச்சேத்தி அருகில் உள்ள கச்சநத்தத்தில் பட்டியலினத்தவர் வீடுகளில் ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 2018 மே மாதம் 28ஆம் தேதி கச்சநத்தம் கோயில் திருவிழா தொடர்பான பிரச்சினையில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சில மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டதால், நான்கு கொலையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு பிசிஆர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை நீதிபதி ப.உ.செம்மல் விசாரித்து வருகிறார். வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 36 பேரும் விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்குச் சிறைத் துறை அதிகாரிகளும் மறைமுகமாக ஒத்துழைத்திருக்கிறார்கள்.

இதைக் கவனித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளிடம், ‘குற்றவாளிகளை அழைத்து வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை’ என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், 36 பேரும் ஒரே சிறையில் இருப்பதால்தான் அனைவரையும் பாதுகாப்போடு நீதிமன்றத்திற்கு அழைத்துவர முடியவில்லை. ஆகவே, அவர்களைப் பிரித்து திருச்சி, சென்னை, கோவை, சேலம் சிறைக்கு மாற்றிவிடலாம் என்ற யோசனையைச் சொல்லியிருக்கிறார். இதனை வழக்கறிஞர்கள் மூலமாகத் தெரிந்துகொண்ட குற்றவாளிகள், வழக்குக்கு ஒத்துழைப்பு தருகிறோம், வேறு சிறைக்கு மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

குற்றவாளிகளுக்கு செக் வைக்கும்விதமாக எஸ்சி / எஸ்டி சட்டம் பிரிவு 7(2)இன்படி குற்றவாளிகளின் சொத்துகளை ஜப்தி செய்து குற்றவாளிகளைப் பதறவைத்தார். தமிழகத்திலேயே குற்றவாளிகளின் சொத்துகளை வழக்கு நடக்கும்போது ஜப்தி செய்தது இதுதான் முதல் உத்தரவு என்கிறார்கள்.

சொத்துகளை ஜப்தி செய்ததால் செலவுக்குச் சொத்துகளை விற்கவும் முடியாமல் வங்கியில் பணமும் எடுக்கமுடியாமல் குற்றவாளிகள் தரப்பு திண்டாடியுள்ளது. மேலும், நீதிபதி ப.உ.செம்மலை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியுமா என்பது தொடர்பாக ஆளும்தரப்பிடமும் குற்றவாளிகள் தரப்பு நாடியிருக்கிறது.

போக்சோ நீதிமன்றம் 2

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் பெரிய நரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருபவர் முருகன்.

2015 ஏப்ரல் மாதம் நான்கு மாணவிகளைப் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 6/2015இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ.எஸ்.பி வந்திதர்பாண்டே நேரடி பார்வையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது.

வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதியாக ப.உ.செம்மல் பொறுப்பேற்று வழக்கு முழு விவரங்களையும் தீரப் படித்துவிட்டு சாட்சிகள் பிறழ் சாட்சியானதைப் பார்த்து, மீண்டும் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குற்றவாளியின் வழக்கறிஞர்கள் மீண்டும் சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என்று தடை போட்டார்கள். அந்த நேரத்தில் அரசு வழக்கறிஞர் இந்திரா காந்தி, குற்றவாளியான ஆசிரியர் முருகன், அவரது மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து மன்னிப்பு கேட்டும், எந்தவிதமான தவறுகளும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பொய் சொல்லச் சொல்லியும் மிரட்டியதாகவும் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8.2.2020 அன்று சார்பு ஆய்வாளர் பிரபாவிடம் வாய்மொழியாகப் புகார் கூறப்பட்டுள்ளது. குற்ற எண் 4/2020 பிரிவு 195(a) ஐபிசி வழக்கு பதிவு செய்துள்ளது.

அந்தப் பெண் கொடுத்த புகாரில் 25.4.2016இல் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல சம்மன் கொடுத்தார்கள். அதைத் தெரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் முருகனும், அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்று நீ சாட்சி சொன்னால் என் வேலை போயிடும் என்றும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என்றும் கேட்டு எங்கள் இருவரின் காலில் விழுந்து அழுதார்கள். மேலும் உங்கள் குடும்பத்திற்குத் தேவையானதைக் கேளுங்கள். பணத்தேவையாக இருந்தாலும் கொடுக்கிறோம் என்றார்கள்.

நீதிமன்றம் சென்றபோது, சிறுமிகளை ஆசிரியர் முருகன் பெண் அரசு வழக்கறிஞரிடம் அழைத்துப்போனார்கள். அந்த வழக்கறிஞர், ‘நீ வாழக்கூடிய பெண், நீதிமன்றத்தில் கேட்டால், ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டும், முருகன் ஆசிரியர் தவறு ஏதும் செய்யவில்லை’ என்று சொல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதனால் அவர்கள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது அரசு வழக்கறிஞர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பயந்து போன பெண் அரசு வழக்கறிஞர் மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று அட்மிட்டாகி மதுரை நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதியிடம் போலீஸ் தரப்பில் உண்மைகளைச் சொன்னதும் அப்படியென்றால் அந்த சிறுமியை அழைத்து வாருங்கள் என்று உத்தரவு போட்டவர் ஜாமீன் மனுவை 5.3.2020க்குத் தள்ளி வைத்துள்ளார்.

மகளிர் விரைவு நீதிமன்றம்

திருமணமாகாத இளம்பெண்ணை தந்தை, சகோதரர், அரசு பேருந்து நடத்துநர், கருக் கலைக்கச் சென்ற இடத்தில் இரண்டு டாக்டர்கள், விசாரிக்கச் சென்ற எஸ்ஐ, போலீஸ் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதால் தப்பிக்க என்ன வழி என்று அரசியல் பிரமுகர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் நாடி வருகிறார்கள்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி செம்மல் தீர விசாரித்து மனசாட்சியையும் கேட்டு காவல் துறை அதிகாரிகளிடம் பர்சனலாக உண்மையை விசாரித்து நிச்சயம் தண்டனை கொடுப்பார் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

நீதிபதி ப.உ.செம்மல் முன்னாள் டிஜிபி தேவாரம், ராஜீவ் குமார் ஐபிஎஸ், மாவட்ட ஆட்சியர் தங்கசாமி போன்ற அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்து அசத்திய நேர்மையான நீதிபதி என்கிறார்கள் நீதித் துறை வட்டாரத்தில்.

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon