மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சிஏஏ யாரைத்தான் பாதிக்கிறது? சிதம்பரம்

சிஏஏ யாரைத்தான் பாதிக்கிறது? சிதம்பரம்

சிஏஏ போராட்டம் இஸ்லாமியர்களுக்கும் அரசுக்கும் இடையேயானது இல்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்திலுள்ள கேரள சமாஜத்தில் இன்று (பிப்ரவரி 23) மாலை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இஸ்லாமிய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானதல்ல.இது அரசியலமைப்பை பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், அரசுக்குமான போராட்டம். அசாமில் என்.ஆர்.சி மூலம் 40 லட்சம் பேர் அந்நியர்கள் என அடையாளம் காட்டப்பட்டனர். என்.ஆர்.சி அறிக்கையை சீராய்வு செய்ததில் 19 லட்சம் பேர் அந்நியர்கள் என முடிவு செய்யப்பட்டது.

இந்த அளவு போதாது என ஒரு தரப்பினரும், அதிகமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்றும், 7 லட்சம் பேர் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் என்று தெரியவந்தது. இந்த அறிக்கையை அசாம் மாநில பாஜக அரசு நிராகரித்தது. சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “சி.ஏ.ஏ சட்டத்தால் இந்தியாவில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என பாஜக அரசு மாபெரும் பொய்யை சொல்லி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை பாதிக்காது எனில் யாரை பாதிக்கும்?” என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம்,

“இந்திய பூமியில் யாரெல்லாம் பிறந்தார்களோ அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்களே. 70 ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை 72 மணி நேரத்தில் பாஜக குழிதோண்டி புதைத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு மிருகபலம் இருப்பதால் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கிறது. என்.ஆர்.சி அறவே கூடாது, என்.பி.ஆர் கைவிடப்பட வேண்டும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம் சிஏஏவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon