மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

விமர்சனம்: மாஃபியா

விமர்சனம்: மாஃபியா

மாஃபியா திரைப்படம் ஒரு போலீஸ் ஸ்டோரி. துருவங்கள் 16 திரைப்படத்தில் போலீஸ்-விசாரணை-திருடன் என கார்த்திக் நரேன் கோர்த்திருந்த நான்-லீனியர் கதையின் அதிரடியான வெற்றியால் மாஃபியா திரைப்படத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அருண் விஜய்-பிரசன்னா ஆகிய இருவரையும் தன் கதையில் எப்படியும் சிறப்பாகவே காட்டிவிடுவார் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், மாஃபியாவில் என்ன நடந்திருக்கிறது?

நார்காடிக்ஸ் டிபார்ட்மெண்டில் போதை தடுப்பு அதிகாரியாக வேலை செய்கிறவர் அருண் விஜய். இவருடன் நார்காடிக்ஸ் பயிற்சியில் இருந்த நண்பர்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் வருண் ஆகிய இருவரும் இருக்கின்றனர். சென்னை நகரம் முழுவதும் போதைப் பொருளால் நிரம்பி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி, அதனால் குற்றங்களும் அதிகரிக்க அருண் விஜய்க்கு வேலை மூச்சு முட்டும் அளவில் இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் மூன்று லெவல் வரை மட்டுமே அருண் விஜய்யால் செல்லமுடிகிறது. அதற்கு மேல் யாரையாவது கைது செய்தால் அரசியல் தலையீடு ஏற்படுவதால், நேராக தலையிலேயே அடிக்கவேண்டுமென முடிவெடுக்கிறார் அருண் விஜய். அந்தத் தலையாக வருகிறார் பிரசன்னா. அருண் விஜய்க்கு முன்பே தன்னை மோப்பம் பிடித்துவிட்ட நார்காடிக்ஸ் தலைமை அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் ஆகிய இருவரை போட்டுத்தள்ளும் பிரசன்னா நேரடியாக அருண் விஜய்யுடன் மோதாமல் இருப்பார். ஆனால், பிரசன்னாவின் போதைப் பொருள் அடங்கிய லாரியை அருண் விஜய் திருடிவிட, இவர் குடும்பத்தைக் கடத்தி வைத்துக்கொண்டு தன் பொருளைத் திரும்பக் கேட்பார் பிரசன்னா. போதைப் பொருளையும் கொடுக்காமல், தன் குடும்பத்தையும் அருண் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்ற தமிழ் சினிமாவுக்கு இதுவரை அறிமுகமில்லா கிளைமேக்ஸை மாஃபியாவில் காணலாம்.

மேஜிக் ஷோக்களுக்கு செல்லும் மக்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். மேஜிக் செய்ய வரும் மெஜீஷியன், நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மன்னிப்பும் கேட்பார். காரணம், ஒருவரை முட்டாளாக்கி பிறகு பரவசமடைய வைப்பதே மேஜிக்கின் அடிப்படை. அதுபோலவே தன் கதையையும் கோர்த்திருக்கிறார் கார்த்திக் நரேன். நான் லீனியர் என்ற முறையை கையில் வைத்திருப்பதால், படத்தின் ஓட்டத்தில் காட்டவேண்டிய காட்சிகளை வேண்டுமென்றே மறைத்து வைத்துவிட்டு, பிறகு ‘இதோ சர்ப்ரைஸ்’ எனக் காட்டுவது மேஜிக் ஷோவில் வேண்டுமென்றால் எடுபடும். ஆனால், திரைக்கதையை கவனித்துக்கொண்டு வரும் பார்வையாளனுக்கு அது எவ்வித திருப்தியையும் தராது. இதனடிப்படையில் தான் இந்த கிளைமேக்ஸ் மிகப்பெரிய அயர்ச்சியைக் கொடுக்கிறது. நான் லீனியரை கதையின் பாகங்களில் கையாள்வது ஒரு நல்ல உணர்வைத் தரும். படம் பார்ப்பவர்களின் சிந்தனைத் திறனை அதிகரித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஆனால், காட்சி ஓட்டத்தில் ஒருவர் தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொள்வதை கட் செய்துவிட்டு, சில காட்சிகளுக்குப் பின் அவர் இறந்ததை மாண்டேஜில் காட்டுவது ‘அதை ஏம்பா அங்க இருந்து எடுக்கணும், திரும்ப வைக்கணும்’ என்றே காட்டத் தோன்றுகிறது.

மிக முக்கியமாக, ஸ்லோ மோஷன் காட்சிகளை நார்மலாக ஓடவிட்டால் ஒன்றேமுக்கால் மணிநேர திரைப்படம் தானாக முக்கால் மணிநேரத்துக்குள் சுருங்கிவிடும். அந்தளவுக்கு ஸ்லோமோஷன் காட்சிகளும், மாண்டேஜ் காட்சிகளும் நிறைந்திருக்கிறது மாஃபியா திரைப்படத்தில்.

அருண் விஜய்யின் கேரக்டர் மிகப்பெரிய ஏமாற்றம். இறுக்கமான முகத்துடன் எவ்வித உணர்வுகளுமின்றி ஒரே மாதிரியாக ஆரம்பம் முதல் கடைசி வரை இருக்கிறார். இதில் பிரசன்னா அருண் விஜய்யை ஓவர்டேக் செய்துவிட்டார். ‘என்ன பண்ணப் போற?’, ‘பாத்துக்கோ’, ‘சரி’ இந்த வசனங்களைத் தவிர பிரியா பவானி சங்கருக்கு எவ்வித வசனங்களும் படத்தில் இல்லை. இதற்கு எதற்காக தமிழ் பேசும் கதாநாயகி என்று பாராட்டினார்கள் என்பதும் தெரியவில்லை. சினிமா கற்றுக்கொண்டு வந்தாலும் சரி, கார்த்திக் நரேனைப் போல சினிமாவைக் கற்றுக்கொள்ளாமல் புதிய சினிமா இயக்க வந்தாலும் சரி பெண் போலீஸ்களுக்கு ஹீரோவின் காதல் நாயகிகளாகத்தான் நடிக்கவைப்போம் என கங்கணம் கட்டிக்கொள்வது ஏன் என்பது தெரியவில்லை. ஒளிப்பதிவு, இசை ஆகியவற்றில் இருக்கும் மெனக்கெடல் கதையிலும், கேரக்டர் டெவலப்மெண்டிலும் இல்லை. இதில் சொதப்பியதற்கும், சோதித்ததற்கும் மாஃபியா-சேப்டர் 2 படத்தில் சேர்த்து சரிசெய்வாரா கார்த்திக் நரேன் என்பது மட்டுமே இப்போதைய கேள்வி. மாஃபியா சேப்டர் 2-வுக்கு நீ போவியா என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. ஆனால், துருவங்கள் 16 படத்தின் தரம் கார்த்திக் நரேனின் மீதான நம்பிக்கையை இன்னும் நிலைக்க வைத்திருக்கிறது.

-சிவா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon