மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

ஓலா, ஊபர் போல 108 ஆம்புலன்ஸ்: விஜயபாஸ்கர்

ஓலா, ஊபர் போல 108 ஆம்புலன்ஸ்: விஜயபாஸ்கர்

108 ஆம்புலன்ஸ் சேவைக்காக பிரத்யேக செயலி தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 20) கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வருவதற்கு ஒருமணி நேரம் ஆகிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கு விளக்கமளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகள் வருகின்றன. ஜப்பானில் விபத்து நடைபெற்ற 13ஆவது நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வருகின்றன. அதேபோல தமிழகத்தில் அழைப்பு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப்புற பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ் சென்றடைகிறது” என்று தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டு மாதத்தில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த விஜயபாஸ்கர், “ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் ‘மேப்’ வசதியைப் போல் 108 ஆம்புலன்ஸ் சேவையிலும் வழங்கப்பட இருக்கிறது. அதற்கான சாஃப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

இதுதவிர ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக 60 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும், இந்த சேவை வழக்கமான 108 இல்லாமல் தனியாக வேறொரு தொடர்பு எண் கொண்டு செயல்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon