மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை

‘கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது போலவே, ‘இளைத்தவனுக்கு மரவள்ளிக்கிழங்கு’ என்றும் கூறலாம். கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது உடல் இளைத்தவர்களுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புமிக்க மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்க்கும் விதமாக மாலை நேரச் சிற்றுண்டியாக இந்த மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடையைச் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ (துருவவும்)

பச்சரிசி - 250 கிராம்

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 6 பல்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்

எண்ணெய் - 500 மில்லி

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும். பின்பு அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி ஏற்றது.

நேற்றைய ரெசிப்பி: மரவள்ளிக்கிழங்கு மசால்வடை

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon