மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிறப்புக் கட்டுரை: சுடுகளிமண் விரல்கள்: பத்மஸ்ரீ வி.கி.முனுசாமி

சிறப்புக் கட்டுரை: சுடுகளிமண் விரல்கள்: பத்மஸ்ரீ வி.கி.முனுசாமி

முத்துராசா குமார்

இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விருதுகள்’ (2020) சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ‘பத்மஸ்ரீ’ விருதுக்குத் தேர்வாகியுள்ள சுடுகளிமண் சிற்பக்கலைஞர் வி.கி.முனுசாமி அவர்களும் ஒருவர். வில்லியனூர் கிருஷ்ணன் முனுசாமி என்ற வி.கி .முனுசாமி, புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் பிறந்தவர். முனுசாமியின் குடும்பத்தார் தலைமுறை தலைமுறையாக சுடுகளிமண் சிற்பங்களும் மண்பாண்டங்களும் செய்து வருகின்றனர். தேசிய விருது, சில்ப குரு விருது, மாநில விருதுகள், கலைமாமணி விருது, யுனெஸ்கோவின் சர்வேதேச அளவிலான தர முத்திரை விருது என்று பத்மஸ்ரீயோடு சேர்த்தால் கிட்டத்தட்ட 75 விருதுகளைத் தனது சுடுகளிமண் சிற்பக் கலைக்காகப் பெற்றுள்ளார் முனுசாமி.

அய்யனார் குதிரைகள், அய்யனார், அகோர வீரபத்திரன், மதுரை வீரன், கருப்பு, சப்த கன்னிகள், சப்த மாதா, முனி, வெள்ளையம்மா, பொம்மியம்மா, வால்முனி, செங்கமலை அய்யனார், கொங்காணி கருப்பு, ஆத்தடியார், கிணத்தடியார், முன் கருப்பு, பின் கருப்பு, நொண்டி கருப்பு, சங்கிலி கருப்பு என்று ஏறக்குறைய 108 நாட்டார் தெய்வங்களைச் சுடுகளிமண் சிற்பங்களாகச் செய்வதில் வல்லவர் முனுசாமி. புவிசார் குறியீடு பெற்றுள்ள வில்லியனூர் டெரகோட்டா குதிரையில் ராஜஸ்தான் பாணியைச் சேர்த்து செய்வது மட்டுமின்றி பாய்ச்சல் குதிரைகள், யானைகளிலும் நாட்டார் தெய்வங்கள் ஆக்ரோஷமாக அமர்ந்து வருவது போன்ற வேலைப்பாடுகள் முனுசாமியிடம் குறிப்பிடத்தகுந்த அம்சம்.

முப்பது விநாடிகளில் அரை சென்டிமீட்டர் அளவிலான மிகச்சிறிய சிற்பங்கள் செய்வதில் பெயர்பெற்ற முனுசாமி, புதுச்சேரியின் முதல் டெரகோட்டா மாஸ்டர். தனது ஐந்தாவது வயதில் களிமண்ணைத் தொட்டு சிற்பக் கலைஞராக உருவெடுத்த முனுசாமிக்கு இப்போது வயது 53. புதுச்சேரியின் மாவட்டத் தொழில் மையம் மற்றும் புதுச்சேரி க்ராஃப்ட் பவுண்டேஷன் மூலமாகத் தனது சிற்பக் கலையை இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும், மூவாயிரத்துக்கும் மேலான ஆசிரியர்களுக்கும், மூன்று லட்சங்களுக்கு மேலான மாணவ மாணவியருக்கும் கற்றுக்கொடுத்துள்ளார். தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாது ஸ்பெயின், பாரீஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து என்று பதினைந்துக்கும் மேலான நாடுகளுக்கும் தனது கலைகளை மாவட்டத் தொழில் மையம் மூலமாகக் கொண்டு சென்றுள்ளார். ஒன்பது நாட்டு மியூசியங்களில் இவரது கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதிக் கலையான சுடுகளிமண் சிற்பக்கலையை அழிந்துவிடாது காக்கவும், எவ்வித பேதமுமின்றி அதை வருங்கால தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல வேண்டுமென்பதே முனுசாமியின் கனவுப் பயணம். பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் வெகுவாக நம்பும் முனுசாமி, மிக எளிமையாக அவர்கள் இந்தக் கலையைக் கையிலெடுக்க வேண்டுமென்பதற்காக களிமண்ணையும், உபகரணங்களாக ஐஸ் குச்சிகளையும், வீணாகிப்போன பேனாக்களையுமே அவர்களிடத்தில் கொண்டுசெல்கிறார்.

முனுசாமிக்குக் கிடைத்த இந்தப் பேரும், புகழும் அவ்வளவு சுலபமாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. நாட்டுப்புறவியல், மண் சார்ந்த கைவினைக் கலைகள், நாட்டார் தெய்வங்கள், வாய்மொழி கதைகள் மீது சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வமுடைய முனுசாமி அவரது குடும்பத்தில் பன்னிரண்டாவதாகப் பிறந்த கடைசிக் குழந்தை. சிறிய குடிசை வீட்டில் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் ஒருவேளை உணவு என்ற நிலை. ஓர் அகல்விளக்கு விற்று கிழங்கு வாங்கி சாப்பிட்டு, மழைக்கு ஒழுகும் அந்தக் குடிசையில்தான் எல்லோரும் ஒண்டிக் கிடப்பார்களாம். தனது 23 வயது வரை தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முனுசாமி கொண்டாடியதே இல்லை. குடும்ப கஷ்டத்தைப் பார்த்த முனுசாமி எட்டாம் வகுப்போடு பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டார். பிறகு, தனது அப்பாவுக்கு உதவியாகக் களிமண்ணை எடுத்துள்ளார். ‘எங்களோடு இந்தத் தொழிலும், கஷ்டங்களும் போகட்டும். நீங்கள் படித்து வேறு தொழில்களுக்குப் போய்விடுங்கள்’ என அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லியுள்ளனர்.

புதுச்சேரியிலிருக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு ஜாடிகள், மண்பாண்டங்கள் செய்து அதை டயர் வண்டிகளில் ஏற்றிப்போகும் அப்பாவுடன் முனுசாமியும் போய் வருவாராம். அங்கு கடைகளிலிருக்கும் மூன்றடி, நான்கடி மண்குதிரைகளைப் பார்த்த முனுசாமிக்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்துள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் போகும்போது அந்தக் குதிரைகள் அவரது மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இதுபோக, ‘சாலிவாகனன்’ என்ற கதையை அவரது அப்பா அடிக்கடி சொல்வாராம். ‘மன்னர் விக்ரமாதித்யன் வேதாளத்திடம் கதைக் கேட்பதும் அதன் பின்னாலேயே அலைவதையும் வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனால் நாட்டையும், நாட்டு மக்களையும் அவர் கண்டுகொள்ளவேயில்லை. கோபமான மக்கள் இந்த நாட்டை விக்ரமாதித்தனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றிட வேண்டுமென நினைத்து ஒரு முனிவரிடம் போய் இதுபற்றி முறையிட்டுள்ளனர். அவரோ, விக்ரமாதித்தனை எதிர்க்க ஒரேயொரு ஆளால் மட்டுமே முடியுமென்று சொல்லியுள்ளார். யாரென்று மக்கள் கேட்டுள்ளனர். சாலிவாகனன் என்ற குயவர் வீட்டில் பிறந்த சிறுவன்தான் அவன் என்று சொல்லியுள்ளார்.

மக்கள் அனைவரும் சாலிவாகனன் வீட்டுக்குப் போய் அவன் அம்மா அப்பாவிடம் சொல்கிறார்கள். எங்களுக்கு இருப்பதோ ஒரே மகன், அதுவும் சிறுவன், எப்படி ஒரு மன்னனை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். மக்கள் போய் முனிவரை அழைத்து வந்துள்ளனர். முனிவரிடமும் பெற்றோர் அதையே சொல்லியுள்ளனர். அவனால் முடியுமென்று சொன்ன முனிவர், அவன் செய்து வைத்த சின்னச் சின்ன குதிரை, யானைப் பொம்மைகள்தான் பெரும் படைகள் என்று சொல்லியுள்ளார். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கமண்டல நீரையும், ஒரு பிரம்பையும் சாலிவாகனன் கையில் கொடுத்து களிமண் சிற்பங்கள் மீது இந்தத் தண்ணீரைத் தெளித்து பிரம்பால் அடித்தால் அவையனைத்தும் உயிர்பெறும் என்று சொல்லியுள்ளார் முனிவர். சாலிவாகனனும் அப்படியே செய்ய அனைத்தும் உயிர் பெற்று குதிரைப் படைகளாக, யானைப் படைகளாக உருமாறியுள்ளன. அவற்றைக் கொண்டு மன்னனிடம் இருந்து நாட்டை மீட்டுள்ளான் சாலிவாகனன்.’

இந்தக் கதையைத் தொடர்ந்து கேட்டு ஆர்வமான முனுசாமிக்கு குதிரைகள் மீது வற்றாத காதல் பிறந்துள்ளது. பிறகு, விளையாட்டு என்றாலும் அதுவும் களிமண்ணோடுதான் என்றானது. தனது அப்பா செய்யும் பெரிய மண்பாண்டங்களுக்குப் பக்கத்தில் இவரும் அதே பொருட்களையும், குதிரைகளையும் சிறியதாகச் செய்து வைத்துள்ளார். வெயிலில் காய வைத்து, சூளையில் தீயால் சுடுவதைப் பார்த்த முனுசாமி தனது பொருட்களையும் அவ்வாறே செய்துள்ளார். வெளிநாட்டவர்கள் முனுசாமி செய்த பொருட்களை 10 ரூபாய் கொடுத்து விரும்பி வாங்கிச் சென்றுள்ளனர். அந்தத் தருணத்தில் முனுசாமிக்கு அளவில்லா மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறந்துள்ளது. இவற்றையெல்லாம் பார்த்த முனுசாமியின் அப்பா சிரித்துக்கொண்டே அவரை ஊக்கப்படுத்தியுள்ளார். பிரமாண்ட குதிரைகள், சிலைகள் செய்யும்போது கால்கள், கழுத்துகள் போன்ற உடல் உறுப்புகளை தனித்தனியாகச் செய்து இணைக்கும் 'சொருகு' (DISMANTLE) முறையைத் தனது அப்பாவிடம் கற்றுக் கொண்டுள்ளார்.

தனது 23ஆவது வயதில் தனியாகச் சிற்பங்களைச் செய்யத் தொடங்கிய முனுசாமி, 16 அடியுள்ள அலங்கார வண்டியொன்றைச் செய்துள்ளார். அதன் நேர்த்தியைப் பார்த்த புதுச்சேரி மாவட்டத் தொழில் மையம் முனுசாமியை அழைத்து அவரது கலைத்திறமையினை அங்கீகரித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும், கைவினைக் கலைகளை மீட்கவும், அதிலிருந்து சுயதொழில்களை வளர்க்கவும் செயல்படும் மாவட்டத் தொழில் மையம் கைவினைக் கலைகள் சார்ந்த பயிற்சியினை வழங்குவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சந்தைப்படுத்தி சர்வேதேச கண்காட்சிகளுக்கும் கொண்டு செல்கின்றனர். முனுசாமியிடம் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொடுத்து பயிற்சி அளிக்கச் சொல்லி, அவருக்கு மாதாமாதம் ஊக்கத் தொகைத் தந்துள்ளனர். முதல் ஊக்கத்தொகை ரூ.1,500. அதிலிருந்து முனுசாமியின் கலைகள், பயற்சிப் பட்டறைகளின் வழியே பல நிலங்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளன. புதுச்சேரி கடற்கரையில் முனுசாமியின் படைப்புகளை முதன்முதலாக கண்காட்சிக்கு வைத்துள்ளனர். அதைப் பார்த்த அனைவரும் முனுசாமியை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். பிறகு, முனுசாமியின் படைப்புகளை ‘இந்திய சர்வேதேச வர்த்தகக் காட்சி’க்குக் கொண்டு சென்று, தேசம் கடந்த பயணங்களை அவருக்குத் தொடங்கி வைத்துள்ளனர்.

சில அதிகாரிகளின் வழிகாட்டலில் முனுசாமிக்குப் புதுச்சேரியின் ‘ரோமன் ரோலண்ட்’ நூலகம் அறிமுகமாகி உள்ளது. வறுமையும், கலையார்வமும் கொடுத்தப் பாடங்களிலிருந்து அந்த நூலகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சிற்பங்கள், கைவினைக் கலைகள் சார்ந்து தேடிப்பிடித்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கியுள்ளார். அதிலிருந்து புதிய பார்வைகள் கிடைக்கப் பெற, நமது சுடுகளிமண் சிற்பங்களின் தொன்மைகளையும் சிறப்புகளையும் கூடுதலாக அறிந்துகொள்கிறார். ஒவ்வொரு பயணத்திலும் தனது கலையின் நுட்பங்களை மெருகேற்றுவதிலும், இந்தக் கலையை எப்படியாவது அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிவிட வேண்டுமென்றும் வைராக்கியமாகியுள்ளார்.

புதுச்சேரியின் முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினைக் கிராமத்தில் முனுசாமியைச் சந்தித்தேன். களிமண் வாசம் மணக்க, உருவேறும் நாட்டார் தெய்வங்களுக்கு நடுவில் அமர்ந்து பேசத் தொடங்கினார்,

“மண் காலம்தான் எல்லா காலத்தை விடவும் ஆதி காலம். ஓர் உயிர் பிறப்பது மண்ணில்தான். மண்ணை வணங்குவதும், மண் அள்ளி தூற்றுவதும் நம்மிடமுள்ள ஒரு சடங்கு. ஆதிமனிதன் தனது தானியங்களையும், உணவுகளையும் பூச்சி அரிப்புகளிலிருந்து பாதுகாக்க களிமண்ணைக் குழைத்து கூடைப் போல பூசி அதற்குள் அவற்றைப் போட்டுள்ளான். காட்டுத் தீ பிடித்து எல்லாமும் எரிந்து போக அந்த களிமண் மட்டும் சிவந்த வடிவில் உருவமாகத் தெரிந்துள்ளது. அதில் ஏதோவொன்று இருப்பதாக அறிந்துகொண்டவன் உடனிருந்தவர்களையும், விலங்குகளையும் சிற்பமாகச் செய்து பார்த்துள்ளான்.

விவசாயக் காலம் வந்த பிறகு, கிராமங்களையும் வளங்களையும் காத்திட நமது மூதாதையர்களையே தெய்வங்களாக்கி எல்லைகளில் வைத்தோம். நோய்நொடிகள் நீங்க, விவசாயம் செழிக்க குதிரைகள் போன்ற பல உயிரினங்களின் உருவங்களை நேர்த்திக்கடன்களாகக் கிராமத் தெய்வங்களுக்குப் படைத்துள்ளோம். நாம் நாகரிகமாகிய பின் பல விலங்குகள் நம்மை விட்டு விலகச் சென்றுவிட்டன. கற்சிலைகளிடம் வேண்டுவதைவிட மண் சிலைகளிடம் வேண்டுவது சீக்கிரமே பலிக்கும். வருடத்துக்கு ஒருமுறை நேரில் போய் கும்பிட்டாலே போதும்.

முன்பெல்லாம் யானைச் சாணம் எடுப்பார்கள் இப்போது வைக்கோல் கூளம், மரத்தூள், தவிடு, பதரு போன்றவற்றை சவுடு மணலோடு சேர்த்து ஊறப்போட்டு மூன்று நாட்களுக்குப் புளிக்கவைத்து சிற்பங்கள் செய்ய தொடங்குவோம். வளைவுகள், அணிகலன்கள், முத்திரைகள் போன்ற நுணுக்கமான அலங்காரங்களுக்கு ஆரம்பத்தில் தங்களது விரல்களையும், நகங்களையுமே பயன்படுத்தி படுநேர்த்தியாக வடித்துள்ளனர். மூங்கில் மற்றும் புளியங்குச்சியிலும் அவற்றைச் செய்யலாம். நான் ஐஸ் குச்சிகள், பழைய பேனாக்களைப் பயன்படுத்துகிறேன். சிற்பங்களின் உருவ அமைப்புகள் அடி கணக்குகளுக்கு ஏற்றவாறு நாட்கணக்கில் இளவெயிலில் மாறி மாறி காயவைப்போம். எருவாட்டிகள், தேங்காய் மட்டைகளால் சிற்பங்களை மூடி, அரை நிலா வடிவில் சூளைப்போட்டு வைக்கோலிட்ட சகதியால் நன்றாகப் பூசி, புகை வெளியேற மேலே துளையிடுவோம். சிற்பம் செய்யத் தொடங்கும்போதும், சூளையில் தீ மூட்டும்போதும் பிடிபிள்ளையார் பிடித்து, கிராம தேவதைகளை வணங்குவோம். சிற்பங்களின் எண்ணிக்கை, உருவ அமைப்புகள் பொறுத்தும் தீ மூட்டத்தின் காலநேரம் மாறுபடும். சூளைப்போட்ட பிறகு, வீட்டில் ஏதாவது கெட்ட காரியம் நடந்துவிட்டாலும் சூளையைப் பிரிக்கும் வரை எங்கும் போக மாட்டோம்.

வெண் சாம்பல் பூத்து வந்தால் நன்றாக உருவம் வந்துவிடும். கருவறைக் குழந்தையைப் பார்ப்பது போன்ற உணர்வது. பிறகு சுண்ணாம்பு அடித்து வேண்டுமென்ற வண்ணம் பூசப்படும். ஆரம்பத்தில் பெரிய குதிரைகளையும், சிற்பங்களையும் கம்பு கட்டித் தூக்கிப் போவார்கள் அல்லது கோயில் இடத்தின் தரையிலிருந்தே குதிரைகள், சிற்பங்கள் எழுப்பப்படும். இப்போது பெரிய சிலைகளைத் தூக்க க்ரேன்கள் வந்துவிட்டன. பல ஊர்களுக்குப் போய் அங்கேயே தங்கி சிறியது முதல் பிரமாண்ட சிற்பங்கள் வரை செய்துகொடுத்து வருகிறேன். மற்றத் தொழில் போல இது இல்லை. மண்ணெடுத்த நேரத்திலிருந்து சூளையில் வெந்து நன்றாக உருவம் வரும் வரை, பிரசவத்துக்குச் செல்லும் பெண்ணின் மனவோட்டம் போல படபடப்பாக இருக்கும். இந்த உலகமும் நாமும் எப்படி பஞ்சபூதங்களால் இயங்குகிறோமோ, அதேபோல்தான் சுடுமண் சிற்பக் கலையும். பஞ்சபூதங்களும் ஒன்றுகூடி வந்தால்தான் ஒரு உருவமே முழுதாகக் கிடைக்கும். அந்தளவுக்கு ஆத்மத் தொடர்புள்ள தொழில் இது. நாட்டுப்புறவியலான இந்தக் கலைக்கு ‘அனாடமி’யும் (ANATOMY) கிடையாது; இலக்கணமும் கிடையாது. ஆர்வமும், கற்பனையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு மண்ணின் தன்மை. இயற்கைக்கு எதிராக நாம் வாழத்தொடங்கிவிட்டதால், மண்ணின் தன்மையும் இப்போது கெட்டுவருகிறது. சில நேரங்களில் சிற்பங்களில் வெள்ளையாகப் பூத்து வருகிறது. கைகளில் புண்கள் போல வருகின்றன. நமது நிலங்களைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வில் இருக்கிறோம்.

நான் பயணப்பட்ட மாநிலங்கள், நாடுகளில் நமது கைவினைப் பொருட்களை வியந்து பாராட்டுகின்றனர். அந்த நாடுகளில் அவர்களது கலை மற்றும் கைவினைகளையும் அதன் கலைஞர்களையும் போற்றிப் பாதுகாக்கின்றனர். மாணவர்களும் இளைஞர்களும் பாடமாகப் படிக்கிறார்கள். அவற்றை ஆர்வமுடன் செய்முறைகளாக செய்கின்றனர். அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. நாமும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ‘ஒன் க்ராஃப்ட் ஒன் வில்லேஜ்’ (ONE CRAFT ONE VILLAGE) என்ற அடிப்படையில் ‘ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் வில்லேஜ்’ (ART AND CRAFT VILLAGE) உருவாக்கிட வேண்டும். அதில் நம்மிடம் இருக்கும் கலைஞர்களை மேடையேற்றி அவர்களுக்கும் வாழ்வளித்து அதன் மூலம் நமது கலைகள் மற்றும் கைவினைத் திறமைகளைப் பலருக்குக் கடத்த வேண்டும். அவர்களுக்கு உண்டான வருமானங்கள், அங்கீகாரங்களை அரசுகள் முறைப்படுத்தி செயலாக்க வேண்டும். நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் பாடங்களாகப் படித்து நிகழ்த்த வேண்டும்.

இந்த விருது கிடைத்ததால் நான் வெளியில் தெரிகிறேன். என்னை விடவும் பல மூத்த கலைஞர்களும், திறமையான கலைஞர்களும் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். கலை ஒன்றுதான் மக்களிடையே இருக்கும் சாதி, மத பிரிவினைகளை உடைக்கும். பத்மஸ்ரீ விருது கொடுத்த நம்பிக்கை உத்வேகத்தால் பயண வேகத்தையும், பயிற்சிப் பட்டறைகளையும், தேடல்களையும் இன்னும் அதிகப்படுத்தி சுடுகளிமண் சிற்பக் கலையை வேறுபாடின்றி அனைவரிடமும் கொண்டுசெல்ல வேண்டும்” என்று தனது சுடுகளிமண் விரலசைவுகளோடு உற்சாகமாகப் பேசினார் முனுசாமி.

தனது அப்பா அம்மாவின் சொற்களை மனத்தில் நிறுத்தியிருக்கும் முனுசாமி, தனது பிள்ளைகளைச் சிற்பக்கலை சார்ந்த படிப்புகளையே படிக்க வைத்துள்ளார்.

திங்கள், 17 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon