மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சுந்தர மூர்த்தியாய் எழுந்தருளிய சிவன்! – சத்குரு ஜகி வாசுதேவ்

 சுந்தர மூர்த்தியாய் எழுந்தருளிய சிவன்! – சத்குரு ஜகி வாசுதேவ்

ஈஷா மஹாசிவராத்திரியை நோக்கி ஒரு யாத்திரை… - 2

சிவன் ஒரு யோகி - வாழ்வியல் உண்மை அவன். தத்துவ ஞானத்தைச் சாராதவன். அறிவாற்றலால் பகுத்துப் பார்த்து உணர இயலாதவன். இவனைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. அவனை ஏற்றுக்கொள்வது மட்டுமே சாத்தியம். சிவன் எனும் அந்தப் பரிமாணத்துடன் உங்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தால், அதனைப் பரிசோதிக்க இயன்றால், அது அற்புதமான விஷயங்களை உங்களுக்கு நிகழ்த்திக் காட்டும். பார்வதி தேவிக்கு அவன் வழங்கியது போலவே நீங்களும் பேரானந்தத்தில் லயித்திருக்க முடியும். இந்தப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவோ, உங்கள் வலிமையினால் வெல்லவோ முடியாது.

தன் முன்னால் வருவதை வெல்ல நினைப்பதே உங்கள் மனதின் இயல்பு. இதுபோன்ற அறிவுடன் செயல்படும்போது, வாழ்வின் சூட்சும அம்சங்கள் உங்களை விட்டு முற்றிலுமாய் நீங்கிவிடும். குறிப்பிடத்தக்க பரிமாணங்கள் உங்கள் வாழ்வில் நுழையவே நுழையாது. பணம் சம்பாதிக்கலாம், வளமை அடையலாம், கைகளில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் அன்பின் சுவையை உங்களால் உணர முடியாது. தியானத்தை உங்களால் உணர முடியாது. கருணையை உங்களால் உணர முடியாது. அனைத்திற்கும் மேலாய், பேரானந்தத்தை உங்களால் உணரவே முடியாது. சிவன் என்னும் அந்தப் பரிமாணம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அதனால் அதனுடன் போராடாதீர்கள்.

சிவன், பார்வதி தேவிக்கு ஞானோதயத்தை மட்டும் வழங்கவில்லை, ஒருவர் தன் வாழ்வில் எவற்றையெல்லாம் உணர முடியுமோ அவை அனைத்தையும் உணரச் செய்தார். பல பாதைகள் மூலமாக ஒரு மனிதர் ஞானோதயத்தை நோக்கி செல்ல முடியும். ஆனால், பார்வதிக்கு அனைத்து தடங்களையும் சிவன் காட்டினார். மென்மையாக, எளிமையான வழிகளின் மூலம், மிக மிக எளிமையாக அவருக்கு வழங்கினார். சிந்திக்கும் மனங்களால் இவற்றை புரிந்துகொள்ள இயலாது.

தன்னை நாடி வருபவர்களிடம் எதிர்ப்பு தோன்றும்போதெல்லாம் சிவன் அதனை முற்றிலும் வித்தியாசமான விதத்தில் கையாண்டார். சில கணங்களில் சீற்றமுற்று, அழித்திடும் தாண்டவம் புரிந்தார். சில சமயங்களில், தன் நெற்றிக்கண்ணை திறந்து தன் முன்னே இருந்தவர்களை எரித்தார். வேறு சில சமயங்களில், எதிர்ப்புகளை மிகச் சூட்சுமமாய் துடைத்தார்.

சிவனை மணந்துகொள்ளத் துடித்த பார்வதி, தன் சிறுவயதிலிருந்தே பல கடுமையான தவங்களை மேற்கொண்டார். சிவன் அகோரமான வாழ்க்கை வாழ்ந்ததால், பலருக்கும் பார்வதி சிவனை மணம் புரிவதில் விருப்பம் இல்லை. அதனால், அவரை திருமணம் செய்ய உற்சாகப்படுத்தவும் இல்லை. பார்வதியின் பெற்றோருக்கும்கூட அவர் சிவனை மணப்பதில் விருப்பமில்லை.

பார்வதியின் அம்மா மீனா இந்தத் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். "உடல் முழுதும் சாம்பல் பூசித் திரிபவனை, மண்டையோட்டில் உணவு உண்பவனை என் மகள் மணப்பது எப்படி? கழுத்தில் கபால மாலை அணிகிறான், அவனது நண்பர்கள் யாவரும் பூத கணங்கள், உருக்குலைந்த உயிர்கள். எப்படி என் மகளை அவனுக்கு மணமுடிப்பது," என்று அவருக்குள் போராட்டம்.

திருமண நாளும் வந்தது. சிவனைப் பற்றிப் பல கதைகள் கேட்டிருந்த மீனா, அவரை நேரில் பார்த்ததில்லை. வீட்டு முகப்பில் அமர்ந்து, மாப்பிள்ளையைப் பார்க்கக் காத்திருந்தவர், பல கடவுளர்களையும் தெய்வீக உயிர்கள் உள்ளே வருவதையும் பார்த்தார். அனைவரும் திருமணத்திற்கு வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை ஒரு ஆணழகனைப் பார்க்கும்போதும், இவர்தான் சிவன் என்று அவர் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதிலோ, "இல்லை, இல்லை, இல்லை" என்பதே.

கடைசியில் சிவன் வந்தார். அவர் உள்ளே நுழையும்முன் பல அலறல் சத்தங்கள் எழுந்தன. அவரைச் சுற்றி பல உயிர்கள் ஊர்ந்தும் நெளிந்தும் வந்துகொண்டிருந்தன. அவரோ, உடல் முழுதும் சாம்பல் பூசி, புலித்தோல் உடுத்தி, போதை தலைக்கேறும் வரை குடித்திருந்தார். மதிமயங்கிய நிலையில் உள்நுழைந்தார். "மஹாதேவன் வந்துவிட்டார்" என்று முழங்கினர்.

"இவனா என் மகளின் கணவன்" என்று மீனா மயங்கிப் போனார். மயக்கத்திலிருந்து தெளிந்த மீனா, "என் மகளைக் காப்பாற்றுங்கள், இவனைப் போன்றவனுக்கு என் மகளைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை," என்று கதறினார். சிவனின் கால்களை ஆரத் தழுவினார். கெஞ்சினார். மன்றாடினார். சிவன் சுந்தரமூர்த்தியாய் வடிவம் பெற்றார். உலகம் அதுவரை கண்டிராத பேரழகனாய் உருவம் பெற்று நின்றார்.

மீனாவின் எதிர்ப்பை சிவன் கையாண்டது இப்படித்தான். மீனா, தான் ஒரு அரசி என்று நினைத்துக் கொண்டிருந்தார், சிவனை இளக்காரமாய் பார்த்தார். அதனால், தன்னைப் பற்றியும் அவளைப் பற்றியும் மீனா கொண்டிருந்த மாய பிம்பங்களை சிவன் உடைத்துப் போட்டார்.

குறிப்பு: மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 21 , 2020

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

(யாத்திரை தொடரும்…)

விளம்பர பகுதி

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon