மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: சுரண்டலைக் கொண்டாடுகிறதா பொருளாதார ஆய்வறிக்கை?

சிறப்புக் கட்டுரை: சுரண்டலைக் கொண்டாடுகிறதா பொருளாதார ஆய்வறிக்கை?வெற்றிநடை போடும் தமிழகம்

நா. ரகுநாத்

பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 (Economic Survey 2019-20) இரண்டு பகுதிகளைக் கொண்டது. அதன் இரண்டாவது பகுதிதான் 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறது. அதன் முக்கியப் பேசுபொருள்களில் சிலவற்றை உள்ளதை உள்ளபடிச் சொல்கிறதா பொருளாதார ஆய்வறிக்கை எனும் கட்டுரையில் திறனாய்வு செய்திருந்தோம். பொருளாதார ஆய்வறிக்கையின் முதல் பகுதி, இந்தியப் பொருளாதாரம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை விவரிக்கிறது. அது பரிந்துரைக்கும் பாதை எப்படிப்பட்டது, அந்தப் பாதை யாருக்கானது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

பொருளாதார ஆய்வறிக்கையின் நிலைப்பாடு?

‘Wealth Creation’, அதாவது செல்வங்களை உருவாக்கும் பாதையில்தான் இந்தியா பயணிக்க வேண்டும் என்கிறது ஆய்வறிக்கை. செல்வங்களை உருவாக்குவதுதான் ‘இந்திய நாகரிகம்’ பல நூற்றாண்டுகளாகப் பயணித்து வந்த ‘பாரம்பரியப் பாதை’; சுதந்திரத்திற்குப் பிறகு சில பத்தாண்டுகளுக்கு அந்தப் பாதையிலிருந்து நாம் விலகிவிட்டோம். 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பாதைக்குத் திரும்பிய நாம், சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்து, தொடர்ந்து செல்வங்களை உருவாக்க வேண்டும்; அப்படிச் செய்தால் நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சொன்னதுபோல் 2024-25இல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகிவிட முடியும். அதை நோக்கியே நம்முடைய முயற்சிகள் இருக்க வேண்டும். இதுவே வளர்ச்சி பற்றி பொருளாதார ஆய்வறிக்கை எடுத்திருக்கும் நிலைப்பாடு.

‘நல்ல கனவுதானே? உன்னதமான நோக்கம்தானே? சரியான பாதைதானே?’ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், நாம் இதை விமர்சனப்பார்வையோடு அணுக வேண்டும். இந்திய நாகரிகம், இந்தியப் பாரம்பரியம் இவற்றை வரையறுப்பது என்பது சர்ச்சைக்குரிய ஒன்று; செல்வங்களை உருவாக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்த அவற்றைப் பொருளாதார ஆய்வறிக்கை பயன்படுத்தியுள்ளது. மேலும், சாணக்கியர் மற்றும் திருவள்ளுவர் போன்றோர் எழுதிவைத்துச் சென்றதை மேற்கோள் காட்டி பொருட்செல்வத்தை உருவாக்குவதுதான் சிறந்த அறம் என்று தான் முன்வைக்கும் வாதங்களுக்கு வலுசேர்க்க நினைக்கிறது ஆய்வறிக்கை.

வரலாற்றுப் பார்வையை நமக்கு வழங்குவதாக நினைத்து பொருளாதார ஆய்வறிக்கையில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களை நாம் நிச்சயமாகக் கேள்வி கேட்க வேண்டும். வரலாற்றில் செல்வம் என்பது, அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரமற்ற மக்களைச் சுரண்டி உருவாக்கப்பட்டது. எப்படியெல்லாம் சுரண்டல் நடந்தது, சுரண்டியவர்கள் யார், சுரண்டப்பட்டவர்கள் யார் எனும் வரலாற்றைப் பேச பொருளாதார ஆய்வறிக்கை தயாரா? மறைக்கப்பட்ட, இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் பல உள்ளன; வரலாற்றில் தனக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, பழங்காலம் ஒரு பொற்காலம் எனும் பிம்பத்தைக் கட்டமைப்பதில் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதேர்ந்தவர்கள்.

ஓர் ஆண்டான் - அடிமை சமுதாயத்தில் அடுத்தவருடைய உழைப்பு மற்றும் உடைமையைச் சுரண்டி செல்வக்குவிப்பு நடத்தியதை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை கொண்டாடுகிறது என்பது மிகவும் வருந்தத்தக்கது.

கட்டுப்பாடுகள் விதித்தாலே சோசியலிசமா?

சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு நாற்பதாண்டு காலம் சோசியலிசப் பாதையில் இந்தியா சென்றுவிட்டதால், செல்வங்களை உருவாக்கும் முயற்சி தடைப்பட்டு விட்டது என்று வருந்துகிறது பொருளாதார ஆய்வறிக்கை.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு விழுக்காடுகூட இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி, இந்திய நாட்டின் வேளாண் மற்றும் தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய ஆட்சியின் பொருளாதாரச் சுரண்டலின் உச்சமாக வங்காளம் போன்ற மாநிலங்களில் 1943ம் ஆண்டு உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது; அந்தப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். எங்கு பார்த்தாலும் ஏழ்மை எனும் நிலையில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது.

பொருளாதாரத்தில் தற்சார்பை (Self-reliance) வலியுறுத்தி, திட்டமிடலின் அவசியத்தை உணர்ந்து, அரசின் முன்முயற்சியோடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தபோதும், நாட்டின் உற்பத்திக் கருவிகளும் செல்வங்களும் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை என்பதை நினைவில்கொண்டால், ‘சோசியலிச இந்தியா என்பது கட்டுக்கதையா?’ எனும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரச் சூழலில் தனியார் துறை இயங்க வேண்டியிருந்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், புதிதாக சுதந்திரம் பெற்ற ஓர் ஏழை நாட்டில் முதலாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாட்டின் வளங்களைப் பயன்படுத்தலாம் என்று மொத்தமாக அவர்கள் போக்கிற்கு விட்டிருந்தால், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகப் போராடி வென்ற விடுதலை அர்த்தமற்றதாகி இருக்கும்.

இன்று உலகின் முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும் அனைத்து நாடுகளிலும், அரசு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளைப் பயன்படுத்தித்தான் அந்நாட்டு முதலாளிகள் செல்வங்களைக் குவித்தனர்; அவர்கள் அரசு விதித்த கட்டுப்பாடுகளையும் ஓரளவிற்கு ஏற்று செயல்பட்டனர். ‘சுதந்திர இந்தியாவில் தனியாருக்கு அரசு சலுகைகளை வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது’ என்பதே இந்நாட்டு முதலாளிகளின் அணுகுமுறையாக இருந்தது.

தனியார் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனும் வாதம் உண்மையல்ல என்று இந்தியாவின் வணிக வரலாற்றைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்ட விஜேந்திர திரிபாதி பதிவுசெய்துள்ளார். லாபகரமாகத் தொழிலை மேற்கொள்ள இந்தியா எனும் மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது முதல், பல துறைகளில் அவர்களால் மேற்கொள்ள முடியாத முதலீடுகளை அவர்கள் பயன்பெறும் வண்ணம் மக்களிடம் வரி வசூலித்துத் தானே மேற்கொண்டதுவரை, தனியாருக்கு அரசு பல வசதிகளைச் செய்து கொடுத்தது. நாட்டின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்த, தனியாரின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கல்களின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை திரிபாதி அவர்களின் கட்டுரைகள் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.

எல்லா சந்தைப் பொருளாதாரங்களும் (Market Economy) குறிப்பிட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுதான் இயங்குகின்றன. அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி, சந்தைகளை நெறிப்படுத்துவதையும் நிறுத்திவிட்டால், 2008இல் ஏற்பட்ட பெரும் உலகப் பொருளாதார வீழ்ச்சி போன்ற பேரழிவுதான் நடக்கும். கட்டுப்பாடுகளற்ற சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவத்திற்கே நல்லதல்ல என்பதுதான் வரலாற்றுப் பாடம்.

நெறிமுறை நீக்கலால் உருவான செல்வங்கள் சாதித்தது என்ன?

Liberalization என்று சொல்லப்படும் நெறிமுறை நீக்கல் நடந்த பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு பன்மடங்கு அதிகரித்ததோடு, தனிநபர் வருமானமும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. வேகமான பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தியப் பங்குச்சந்தை உருவாக்கியிருக்கும் செல்வங்கள் எனும் அபத்தமான வாதத்தை முன்வைக்கிறது ஆய்வறிக்கை.

பொருளாதாரம் வேகமாக வளர்ந்தால் நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரப் படிநிலையில் வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்களை வெவ்வேறு வகையில் பாதிக்கிறது. அந்தப் பொருளாதார வளர்ச்சியில் பங்குபெறுபவர்கள் யார், வளர்ச்சியால் ஏற்படும் பலன்கள் நாட்டு மக்களிடையே நியாயமான முறையில் பங்கிடப்படுகிறதா, வளர்ச்சியில் பங்குபெறாதவர்கள் நிலை என்ன, அவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையை எப்படி உருவாக்குவது எனும் கேள்விகளைக் கேட்டால்தான் வளர்ச்சியின் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்தியாவில் பங்குச்சந்தை என்பது ஊகவணிகம் செய்வதற்கான களம் என்பது நாடறிந்த உண்மை. குறுகியகாலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க இங்கு வரும் அந்நிய நிதி மூலதனம்தான் (Foreign Finance Capital) நம் பங்குச் சந்தையை ஆட்டிப்படைக்கும் சக்தி என்பதைச் சொல்லாமல், பங்குச் சந்தை உருவாக்கும் செல்வம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதுபோல் பேசுகிறது பொருளாதார ஆய்வறிக்கை. இந்தியாவில் எத்தனைக் குடும்பங்கள் தங்கள் சேமிப்புகளைப் பங்குச் சந்தையில் போடுகின்றன என்பதுபற்றி புள்ளிவிவரங்கள் ஏதும் தராமல், பங்குச் சந்தையின் ‘சாதனைகளைக்’ கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.

இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய நிதி மூலதனம் முதலீடு செய்யும் பணம், இந்திய நாட்டிற்கு அந்நியச்செலாவணி. 2003-04க்குப் பிறகு அதன் வருகை பன்மடங்கு பெருகியதற்கும், இந்திய வணிக வங்கிகள் நுகர்வு மற்றும் தொழில் முதலீட்டுக்கு வாரிவாரி கடன் வழங்கியதற்கும், வாராக்கடன் பிரச்சினையால் இன்று இந்திய வங்கிகள் நெருக்கடியில் இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியப் பங்குச் சந்தை இந்தியப் பொருளாதாரத்துக்கு மெச்சிக்கொள்ளும் அளவுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை என்பதுதான் உண்மை.

தங்குதடையின்றி செல்வங்களை உருவாக்கச் சொல்லும் ஆய்வறிக்கை

அரசின் தேவையற்ற இடையீடுகளால்தான் (Intervention) செல்வங்கள் உருவாக்குவதில் தொய்வு ஏற்படுவதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. அரசு செய்யும் இடையீடுகள் என்னென்ன? உணவு மானியம் வழங்குவது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது, நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது எனச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்கும் இடையீடுகளை அரசு மேற்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வறிக்கை.

மக்கள் நலனைப் பற்றி சந்தைக்கு எந்த அக்கறையும் கிடையாது; யாரிடம் ஏற்கனவே வாங்கும் திறன்/சக்தி (Purchasing Power) அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாகத்தான் சந்தை செயல்படும். சந்தை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. சந்தையில் பெரும்பான்மை மக்கள் பங்குகொண்டு பயனடைவதென்பதை சந்தை எந்த வகையிலும் உறுதி செய்யாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். சந்தையின் வழியே செல்வங்களை உருவாக்க முடியும்; முற்போக்கான மறுபகிர்வு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய முடியாது. அதனால்தான் அரசின் இடையீடுகள் அவசியம்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் நுகர்வு சரியும்போது, உற்பத்தி செய்த பொருட்களை விற்கமுடியாத நேரத்தில் மட்டும் அவர்களுடைய கிராக்கியை உயர்த்த அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல் எங்கிருந்து வருகிறது? பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் நெருக்கடியில் தத்தளிக்கும்போது, அந்த வங்கிகளை மறுமுதலாக்கம் செய்வதற்கான (Recapitalization) கோரிக்கைகள் எங்கிருந்து எழுகின்றன? பெரிய தனியார் நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குப் போனால் அவற்றைக் காப்பாற்றுவது யார்? ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் பெருநிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்படும் வரிவிலக்குகள் அரசின் இடையீடுதானே? அவையெல்லாம் சந்தைக்கு அவசியமான இடையீடுகள்.

எந்த இடையீடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரம் படைத்தவர்களும், செல்வாக்கு உள்ளவர்களும் முடிவு செய்யும் வரை செல்வக்குவிப்பு சிறப்பான முறையில் நடந்துகொண்டிருக்கும் என்பதால் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம்; அடுத்த ஆய்வறிக்கையிலும் செல்வக்குவிப்பின் பெருமைகளைப் பேசலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயிற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon