மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

பட்டினப் பிரவேசம் ரத்து: நடந்தே சென்ற ஆதீனம்!

பட்டினப் பிரவேசம் ரத்து: நடந்தே சென்ற ஆதீனம்!

திருப்பனந்தாளில் நடைபெற இருந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 13ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனையடுத்து, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்களில் வழிபாடு நடத்தியதோடு, மனிதரை மனிதரே பல்லக்கில் வைத்து தூக்கும் பட்டின பிரவேசம் நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிபுரிந்தார்.

இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் பிப்ரவரி 12ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பட்டினப் பிரவேசம் செய்தால் மறியல் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 12) திருப்பனந்தாள் வருகை தந்த ஆதீனத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பனந்தாள் கடைவீதிகளில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், நீலப்புலிகள் அமைப்பினர் அதிகளவில் திரண்டிருந்தனர். இதனையடுத்து, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கைத் தவிர்த்து நடந்தே சென்று பட்டினப் பிரவேசம் செய்வதாக ஆதீனம் தெரிவித்தார். இந்தத் தகவல் காவல் துறையினர் மூலமாக போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, ஆதீனத்துக்கு நன்றி என முழக்கமிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.க. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது, அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லுவதாக இருந்தால் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திராவிடர் கழகத்தினர் மறியல் செய்ய இருந்த சூழ்நிலையில், தருமபுரம் ஆதீனகர்த்தர் ‘நான் பல்லக்கில் செல்லவில்லை; நடந்தே செல்லுகிறேன்' என்று காவல்துறை அதிகாரியின்மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் மறியல் போராட்டம் நிறுத்தப்பட்டது. காவல்துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

த.எழிலரசன்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon